செயற்கை நுண்ணறிவு: இந்தியாவுக்கான சவால்கள் என்ன?
செயற்கை நுண்ணறிவு, கோடிக்கணக்கானவர்களின் வேலைகளைப் பறிக்கப்போகிறது எனும்போது அச்சமாக இருக்கிறது

மனிதவளம் இந்தியாவில் ஏராளம் – அது 2050 வரையிலும் மேலும் அதிகரிக்கப்போகிறது. ஆனால் அந்த வளத்தின் ‘தரம்’, வளர்ந்த நாடுகளில் உள்ள மனித வளங்களிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு மாறுபட்டிருக்கிறது. வளர்ந்த நாடுகளில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் பள்ளிக்கல்வி பெறுவதும் அவர்களில் அதிகம் பேர் கல்லூரிகளில் தொடர்ந்து படிப்பதும் நிகழ்கிறது. அங்கு வாழ்வோர், தங்களுடைய வாழ்நாள் முழுவதும் எதையாவது கற்றுக்கொள்ளவும் புதிய திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்புகள் ஏராளம். இந்தியாவில் மக்கள்தொகைப் பெருக்கமானது – மக்கள்தொகைப் பெருக்கத்தாலேயே ஏற்படும் பல சுமைகளைக் கொண்டது.
ஆரம்பப் பள்ளியில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக உயர்வாக இருக்கிறது, அதுவே நடுநிலைக் கல்வியின் இறுதிநிலை, பள்ளிக் கல்வியின் இறுதி நிலை, மேல்நிலை பள்ளிக்கல்வி நிலை ஆகியவற்றில் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது (இடைநிற்றல் அதிகம்). பள்ளிக்கல்வியில் சேரும் மாணவர்கள் அப்படியே தொடர்ந்து உயர் கல்வி பயிலச் சேர்வது ஒட்டுமொத்தமாகவே 45% முதல் 50% ஆகத்தான் இருக்கிறது. கல்லூரிகளில் சேரும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டப் படிப்புடன் படிப்பை முடித்துக் கொள்கிறார்கள், அந்தப் பட்டங்கள் அவர்களை ஏதாவதொரு வேலைக்கு முழுமையாகத் தயார் செய்யும் வகையில் திறனைக் கூட்டுவதாகவோ, புதிய வேலைகளுக்குத் தயார் நிலையிலோ ஆக்குவதில்லை – பட்டப் படிப்புக்குப் பிறகு உரிய வேலைவாய்ப்பைப் பெற இளைஞர்களுக்கு இதுவே பெரும் தடையாக இருக்கிறது.
எதிர்காலமும் அச்சமும்
டேரியோ அமோடெய் (ஆந்தரோபிக் நிறுவனத் தலைமை நிர்வாகி), ‘தொழில்நுட்பத்தின் வளரிளம் பருவம்’ (The Adolescence of Technology) என்ற தலைப்பில் எழுதியுள்ள 38 பக்க கட்டுரையை வாசித்தேன். பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தக்கூடிய சீர்குலைவுகள் குறித்து அவர் எச்சரிக்கிறார்; மேஜையடியில் உட்கார்ந்து வேலை செய்யும் பலருடைய வேலைகளை - இதுவரை இருந்திராத வேகத்திலும் எண்ணிக்கையிலும் - அது பறித்துவிடும் என்கிறார். அதைப் படிக்கவே அச்சமாக இருக்கிறது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இன்னொரு ஆய்வு – ‘இந்தியாவில் நிலவும் சாதி அமைப்பு குறித்து செயற்கை நுண்ணறிவு நன்கு தெரிந்து வைத்திருக்கிறது’என்கிறது. இந்த சாதிப் பாகுபாட்டை செயற்கை நுண்ணறிவுக்குள்ளும் புகுத்திவிட்டால், அதன் விளைவை எண்ணிப் பார்க்கவே அச்சம் அதிகரிக்கிறது.
எதிர்கால நலனுக்கும் நற்பயனுக்கும் செயற்கை நுண்ணறிவு, கதவுகளைத் திறந்துவிடும் என்று பிரதமர் கூறுவதென்னவோ உண்மைதான். அதே சமயம், இந்த செயற்கை நுண்ணறிவுதான் கோடிக்கணக்கானவர்களின் வேலைகளையும் பறிக்கப்போகிறது எனும்போது அச்சமாக இருக்கிறது. (பொதுப் போக்குவரத்து வாகனங்களில்) பயணச் சீட்டுகளை வழங்குவது, வழங்கிய சீட்டுகளை சரிபார்க்கும் பணிக்காகவே - பேருந்துகளிலும் ரயில்களிலும் - பணியாற்றுபவர்கள், ரயில்களுக்கு சிக்னல் காட்டும் ஊழியர்கள், போக்குவரத்துக் காவலர்கள், சுருக்கெழுத்தாளர்கள், தட்டச்சர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், மொழிபெயர்ப்புத் தொழிலில் இருப்பவர்கள், ஆய்வுக்கூடத் தொழில்நுட்பர்கள், வங்கிகளின் காசாளர்கள், தனிப்பயிற்சி மூலம் பாடம் சொல்லித்தந்து பிழைப்பவர்கள் என்று பலருடைய வேலையை இனி செயற்கைத் தொழில்நுட்பமே செய்துவிடும் என்பதால், இந்த வேலைகள் அனைத்தும் வெகு விரைவிலேயே வழக்கொழிந்து போய்விடுமாம்.
மேஜை முன் அமர்ந்து பலர் செய்யும் வேலைகளில் பெரும்பாலானவை விரைவிலேயே இயந்திரங்கள் மூலம் செய்வதாகிவிடும் என்று ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கூறுகிறார். இந்த நிறுவனம் 2025இ ல் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டது. தங்களுடைய நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யும் நோக்கில் 12,000க்கும் மேற்பட்டோரை ‘டாடா கல்சல்ட்டன்ஸி சர்வீஸஸ்’ (டி.சி.எஸ்) 2025இ ல் வேலையிலிருந்து நீக்கிவிட்டது. அடுத்த ஐந்தாண்டுகளில் வணிகச் செயல்களில் ‘அயல்பணி ஒப்படைப்பு’முறையும் (பிபிஓ), தகவல் தொழில்நுட்பத்துறை சேவைகளுமே கூட மறைந்துவிடும் என்கிறார் இந்திய-அமெரிக்கத் தொழிலதிபர் வினோத் கோஸ்லா.
இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று போதிய வேலைவாய்ப்புகள் இல்லை என்பது. நடப்பு வேலையின்மை அளவு அதிகாரப்பூர்வமாக 5.1%, ஆனால் உண்மையில் இது, அதைவிட அதிகம் என்று நம் அனைவருக்கும் தெரியும். இளைஞர்களிடையில் மட்டும் வேலைவாய்ப்பின்மை 15%-க்கும் அதிகம். வேலை செய்வோரில் 55% பேர் ‘சுயமாக’வேலை செய்கின்றனர் அல்லது ‘அன்றாட ஊதிய’அடிப்படையில் வேலை செய்கின்றனர். கிராமப்புறங்களில் இளைஞர்கள் – இளம் பெண்கள் வேலையில்லாமல் இருந்தாலும், அவர்கள் ‘சுயவேலைவாய்ப்பில்’ இருப்பதாக அவர்களுடைய குடும்பத்தார் கூறுகின்றனர். நகரங்களில் கடினமான உடல் உழைப்பு தேவைப்படும் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவும் – இயந்திரங்களும் புகுந்துவிட்டால் வேலையின்மை என்பது படித்த இளைஞர்களிடம் இப்போது இருப்பதைவிட அதிகமாகிவிடும். தகவல் தொழில்நுட்பம், அது சார்ந்த சேவைத் துறைகள் ஆகியவற்றில் வேலை செய்வோரின் வேலைகளும் பறிக்கப்பட்டுவிட்டால் நிலைமை கொந்தளிப்பாகிவிடும்.
இப்படிப்பட்ட பெரும் சவால்களை இந்தியாவும் உலகமும் எப்படி சமாளிக்கப்போகின்றன? எனக்குத் தெரிந்தவரை, உலகம் – இதில் இந்தியாவும் அடக்கம் – இப்படிப்பட்ட வேலையிழப்புகளைச் சமாளிக்கும் மாற்றுத் தீர்வு எதையும் சிந்திக்கவே இல்லை. மக்கள்தொகை குறையும் நிலையில் உள்ள வளர்ந்த நாடுகளுக்கு, செயற்கை நுண்ணறிவு பெரிய சாதகமாக அமையப் போகிறது; மக்கள்தொகை அதிகமுள்ள – பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் - நாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவு அரசின் திறமையை சோதிக்கும் மிகப் பெரிய சுமையாக மாறப் போகிறது. எனவே இரு வகையிலான நாடுகளுக்கும் தீர்வுகள் இயல்பாகவே வெவ்வேறாகத்தான் இருக்க முடியும்.
கடுமையான நடவடிக்கைகள்
புதிய உற்பத்தித் தொழில்நுட்பங்களை இடைவிடாமல் கையாள்வது என்றால் இப்போதுள்ள தொழிலாளர்களை லட்சக்கணக்கில் வேலையிலிருந்து நீக்க வேண்டிவரும். புதிய உற்பத்தி முறைகளைக் கண்டுபிடிப்பதற்கும் அவற்றைத் தொழிற்சாலைகளில் பரவலாக பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கும், தொழில்நுட்பங்களைப் புதிதாகக் கையாளும்போது ஏற்படும் விளைவுகளை உள்வாங்குவதற்கும் கால அவகாசம் தேவைப்படும் என்று ‘எகானமிஸ்ட்’நாளிதழ் கூறுகிறது.
வேலை தேடுவோர் கோடிக்கணக்கிலும், செய்யப்பட வேண்டிய வேலைகளும் கோடிக்கணக்கில் இருக்கும் நிலையில் இந்தியா பின்வருவனவற்றுக்குத் தயாராக வேண்டும்:
Ø நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக்கூடங்களில் படித்துவிட்டு வரும் இளைஞர்களுக்கு வேலை தரும் வகையில், வெவ்வேறு நிலைகளிலான தொழில்நுட்பங்களைக் கையாளும் வேலைகளை இந்தியா உருவாக்க வேண்டும், இந்த அவசியம் வளர்ந்த நாடுகளுக்குக் கிடையாது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
Ø மேல்நிலைப்பள்ளி நிலையிலேயே, வெறும் பாடம் சார்ந்த படிப்பையும், பாடம் அல்லாது தொழில்திறன் கையாளத் தயார் செய்யும் வகையிலான படிப்பையும் மாணவர்களின் ஆர்வம், திறமை ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்து கற்றுத்தர வேண்டும்.
Ø அறிவியல் சாராத படிப்புகளில் முதுகலை வரை பயில, எண்ணற்ற ‘தேர்ச்சி அவசியம்’போன்ற தடைகளைக் களைய வேண்டும், அதே சமயம் அறிவியல்-தொழில்நுட்பம்-பொறியியல், கணிதம் கலந்த படிப்புடன் வேலை செய்வதற்கான திறன்களில் பயிற்சியும் அளிக்க வேண்டும்.
Ø கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் பராமரிப்புத் துறைகளுக்கு பெரும் தொகையை அரசு செலவு செய்ய வேண்டும்.
Ø பெரிய தொழில் நிறுவனம், பெரிய சந்தை, பெரிய சங்கிலித்தொடர் வலையமைப்பு, பெரிய வங்கி உருவாக்கம் என்பவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு நல்ல தரமான பொருள்களைத் தயாரிக்கவும் சேவைகளை வழங்க உரிய சந்தையை, உள்ளூர் அளவிலும் பிராந்திய அளவிலும் வளர்க்க வேண்டும்.
Ø சிறு, குறு, நடுத்தரத் தொழில் பிரிவுகள்தான் பெரிய தொழில்நிறுவனங்களைவிட அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் என்பதை அரசு அங்கீகரிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உறுதியளித்தபடி செயற்கை நுண்ணறிவு இத்துறை நிறுவனங்களுக்கு உதவினால், இந்தத் துறை ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தரும். ஆண்டுக்கு 80 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் அவசியம் என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கூறியிருக்கிறார், ஆனால் உண்மையில் அதைவிட அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
Ø செயற்கை நுண்ணறிவைக் கையாள்வோர் அதனால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை அழித்துவிடுவார்கள். அவர்களே புதிதாக அதே எண்ணிக்கையில் வேறு வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்யும் அதிகாரம் தொழில் நிறுவனங்களுக்குத் தேவை என்று ஜே.பி. மார்கன் சேஸ் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி கூறிய கருத்தை நாம் ஏற்க வேண்டியதில்லை, வேலைநீக்கங்களுக்குத் தடைகூட விதித்துவிடலாம். சமூக நலனுக்காகச் செயல்படும் கடமையைத் தொழில் நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்பு புதிதாக வலியுறுத்துகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் சமூக பொறுப்பாக்கப்பட வேண்டும்.
கலக்கம் தரும் எதிர்காலம்
வேலைவாய்ப்புகள் அருகிவிட்ட உலகம், குறைந்த எண்ணிக்கையில்தான் வேலைவாய்ப்புகள் என்பது எதிர்காலமே இருள் சூழ்ந்ததுதான் என்ற நிலையை ஏற்படுத்திவிடும். வேலைதான் மனிதர்களின் தனி அடையாளம். உலகின் வேறெந்த உயிரினமும் தனக்கு வேண்டிய உணவை வேட்டையாடுவதைத் தவிர வேறெந்த வேலையையும் செய்வதில்லை. செயற்கை நுண்ணறிவே நாம் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் செய்துவிடும், நம் எல்லோருக்கும் வளமான வாழ்வை அளித்துவிடும் என்றால் மனிதர்கள் எதைத்தான் செய்வது? செயற்கை நுண்ணறிவால் ஏற்படப்போகும் விளைவுகள் அடுத்த சில ஆண்டுகளில் தெரிந்துவிடும் என்றாலும், அதைப் பற்றிய சிந்தனைகளில் மூழ்க இதுவே உரிய நேரம்.
(தமிழில்: சாரி)


