Top
Begin typing your search above and press return to search.
தலையங்கம்
2 நிமிட வாசிப்பு

டெல்லி தர்பார் எப்போது மாறும்?

மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வின் பங்கை மட்டும் அல்ல; வரிவிதிப்பு அதிகாரத்தின் பங்கையுமே இந்தியா விஸ்தரிக்க வேண்டும்

டெல்லி தர்பார் எப்போது மாறும்?
X

இந்தியக் கூட்டாட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சியை, நிதிப் பகிர்வை மாற்றாமல் சிந்திக்கவே முடியாது. ஒன்றிய ஆட்சியாளர்கள் இதை எப்போது புரிந்துகொள்வார்கள்?

மாநிலங்களுடனான ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வை 50% ஆக்க வேண்டும் எனும் மாநிலங்களின் கோரிக்கையை நிராகரித்து, மீண்டும் அதே 41% என்பதில் நிதி ஆணையம் பிடிவாதம் காட்டுவது மோசமான போக்கு. நாட்டின் பெரும்பான்மை வரி அதிகாரங்களைத் தன்னிடம் குவித்துக்கொண்டிருக்கும் இந்திய அரசு, 'செஸ்' மற்றும் கூடுதல் கட்டணங்கள் வழியாக கிடைக்கும் வருவாயைத் தன் வசமே வைத்துக்கொண்டு, மிச்சம் பகிரும் வருவாயில் ஆகப்பெரும் பங்கை தன் வசமே வைத்துக்கொள்வது தொடரும் அநீதி.

முன்னணி கூட்டாட்சி நாடுகளுடன் ஒப்பிடுகையில், பல வகைகளிலும் எப்படியோ அப்படியே நிதிப் பகிர்விலும் இந்தியாவின் நிலை கவலைக்குரியது. உள்ளபடி மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வின் பங்கை மட்டும் அல்ல; வரிவிதிப்பு அதிகாரத்தின் பங்கையுமே இந்தியா விஸ்தரிக்க வேண்டும்.

சுவிட்ஸர்லாந்தில் மாநிலங்கள் வெறும் 20% நிதிக்கே மத்திய அரசைச் சார்ந்துள்ளன. கனடாவில் மாநிலங்களின் 80% செலவு அவற்றின் சொந்த வருவாயிலிருந்தே பூர்த்தியாகிறது. இந்தியாவிலோ 60% பொதுச் செலவுகளைச் சுமக்கும் மாநிலங்களால், 38% வருவாயை மட்டுமே சொந்தமாகத் திரட்ட முடிகிறது. ஜிஎஸ்டி முறை வந்த பிறகு, மாநிலங்களின் நிதிச் சுதந்திர எல்லை மேலும் சுருங்கிவிட்டது.

நாட்டின் பரவலான வளர்ச்சிக்கு, வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களுக்கு உதவுவதும் அவசியம். அதேசமயம், அது வளர்ச்சியில் முன்னகரும் மாநிலங்களுக்கான தளைக்கட்டாகவும், அபராதமாகவும் ஆகிவிடக் கூடாது. ஜெர்மனி போன்ற கூட்டாட்சி நாடுகளை இந்தியா இந்த விஷயத்தில் கவனிக்க வேண்டும்.

சுதந்திர இந்திய வரலாற்றில் மாநில முதல்வராக இருந்து பிரதமரானவர் மோடி. அவர் அதிகம் பயன்படுத்தும் ‘சீர்திருத்தம்’ உள்ளபடி அதிகாரப் பரவலாக்கமாகத்தான் இருந்திருக்க வேண்டும். நடப்பதோ நேர் எதிர். முக்கால் நூற்றாண்டு ஜனநாயக அனுபவத்துக்குப் பிறகும், மாநிலங்களைத் தற்சார்பு நோக்கி நகர விடாமல் டெல்லியிடமே கையேந்த வைப்பது நாம் எதைக் கற்றிருக்கிறோம் எனும் கேள்வியையே எழுப்புகிறது. நிதிப் பகிர்வானது எண்களின் விளையாட்டு அல்ல; அது அதிகாரத்தின் ஜனநாயகம்!


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it