இந்தியாவின் மேம்பாடு எதில் இருக்கிறது?

‘காத்திருத்தல்’ என்பது 1970களில், இந்தியாவின் தேசிய வழக்கமாக இருந்தது. ஒரு தொலைபேசி இணைப்பு வேண்டுமெனில், 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். சமையல் எரிவாயுவுக்கும் அதே கால அளவு. பஜாஜ் ஸ்கூட்டருக்கு, முன்தொகை செலுத்திப் பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டும். தனியார் துறை என்பதால், கள்ளச்சந்தையில் அதிகப் பணம் கொடுத்தால், விரைவில் கிடைக்கும். ரொம்ப அவசரப்படும் மனிதர்களுக்கு, சைக்கிளை விடக் கொஞ்சம் வேகமாகச் செல்லும் ‘லூனா’, என்றொரு மொப்பெட் கிடைக்கும். சைக்கிளுக்கும் மோட்டார் பைக்குக்கும் பிறந்த சவலைப் பிள்ளை.
1947இல், விடுதலை பெற்றபோது, இந்தியா உலகின் ஏழை நாடுகளுள் ஒன்றாக இருந்தது. அதன் முக்கிய இலக்குகள் உணவுத் தன்னிறைவை அடைவதாகவும், பொருளாதார வளர்ச்சியை அடையத் தேவையான அடிப்படைக் கட்டுமானங்களை உருவாக்குவதாகவும் இருந்தன.
இந்தியா என்னும் பெரும் பொருளாதாரத்தை ஒரு மாபெரும் இயந்திரமாக உருவகித்துக்கொண்டால், அதன் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்த இரண்டு வழிகள் இருந்தன.
1. இயந்திரத்தின் கொள்திறனை மேம்படுத்துதல்
2. இயந்திரத்தின் செயல்திறனை மேம்படுத்துதல்.
விடுதலை பெற்ற இந்தியாவில் முதலில் அரசின் கவனம் குவிந்தது வேளாண்மையிலும், கனரகத் தொழில்களிலும்தான். வேளாண்மையில், கொள்திறனை மேம்படுத்த, நீர்ப்பாசனப் பரப்பை அதிகரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மானாவாரி வேளாண்மையை விட, நீர்ப்பாசன வேளாண்மையில் மகசூல் அதிகம். அதே போல, வீரிய விதைகள், உரங்கள் போன்றவை மகசூல் திறனை மேம்படுத்தின. அரசு, ஆதரவு விலையை அறிவித்து, அதன்படி கொள்முதலும் செய்யத் தொடங்கியது. நல்ல மகசூல், நல்ல விலையில் அரசுக் கொள்முதல் என்னும் சூழலில், இந்திய உணவு தானிய உற்பத்தி பல மடங்கு பெருகி, உலகின் இரண்டாவது பெரிய உணவு தானிய உற்பத்தியாளர் என்னும் நிலையை 25 ஆண்டுகளில் அடைந்தது.
அதே போல, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுக்கு, இந்திய அரசின் அதரவு கிடைத்து, ஒரு நல்ல வணிகச் சங்கிலி உருவானது. பால் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடத்தை அடைந்தது. பாலுக்காக வளர்க்கப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை (கொள்திறன்), அவற்றின் பால் உற்பத்தித் திறன் (செயல்திறன்) என இரண்டும் மேம்பட்டு, இந்த வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தன.
விடுதலை பெற்ற இந்தியாவில் சிறு, குறு தொழில்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அரசு அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்துவந்தது. அரசுக் கொள்முதலில் குறுந்தொழில்களுக்கு முன்னுரிமை, சகாய விலைக் கடன், விற்பனை வரி, கலால் வரி விலக்கு போன்றவை குறுந்தொழில்களுக்கு பெரும் உதவியாக இருந்தன.
1969ஆம் ஆண்டு வங்கிகளை தேசியமயமாக்கி, ஊரக வங்கிக் கிளைகளை உருவாக்கி, வேளாண்மைக்கும், சிறுதொழில்களுக்கும் குறைந்த வட்டியில் கடன்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் விளைவாக, அதீத வட்டிச் சுமையில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு உழவர்களும் குறுந்தொழில் முனைவோரும் பயன்பெற்றனர்.
பற்பல தடைகளைத் தாண்டி, கால ஓட்டத்தில், இந்தியப் பொருளாதாரம் வளரத் தொடங்கியது. அதன் முக்கிய அடையாளமாக, அடிப்படைத் தேவைகளைத் தாண்டி, செல்வம் ஈட்டும் ஒரு மத்தியவர்க்கம் 70களில் உருவாகத் தொடங்கியது. அதற்கு தொலைபேசியும், சமையல் எரிவாயுவும், மோட்டார் வாகனங்களும் தேவைப்பட்டன. ஆனால், கிடைக்கவில்லை. மக்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஏன் மக்கள் அப்படிக் காத்திருக்க வேண்டியிருந்தது? இந்தியா விடுதலை பெற்றபோது, இந்தியாவின் ஏற்றுமதி மிகக் குறைவாக இருந்தது. ஆனால், இந்தியாவின் கட்டமைப்பை உருவாக்க அந்நிய தொழில்நுட்பமும், செலாவணியும் பெருமளவில் தேவைப்பட்டன. இந்த அடிப்படைச் சமநிலையின்மையால், அந்நியச் செலாவணிச் சிக்கலை அது பலகாலம் சந்தித்துவந்தது. தேவையற்ற நுகர்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டால், அது அந்நியச் செலாவணித் தேவையை அதிகரித்து, அடிப்படைக் கட்டமைப்புத் தேவைகளுக்காகக் கிடைக்க வேண்டிய அந்நியச் செலாவணிக்குச் சிக்கல் ஏற்படுத்திவிடும். அப்படியான ஒரு நிலை, இந்திய ரூபாயின் மதிப்பில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். அது, அன்று இளம் சிசுவாக இருந்த விடுதலை பெற்ற இந்திய நாட்டின் பொருளாதாரத்தை அசைத்துவிடும் என்றொரு அச்சம் அனைவரிடமும் இருந்தது. எனவே அந்நியச் செலாவணி மீதும், நுகர்பொருட்கள் உற்பத்தியின் மீதும் பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்தக் கட்டுப்பாடுகளை சமூகத்தின் பல அங்கங்களும் தத்தம் சுயநலத்துக்கு உபயோகிக்கத் தொடங்கின. உற்பத்தி அனுமதிக்கு லஞ்சம் வாங்கிக் கொழுத்தது அதிகார வர்க்கம். திட்டமிட்டு, குறைவாக உற்பத்தி செய்யப்பட்ட நுகர்பொருட்களுக்கு, முன்பணமும், கள்ளச் சந்தையில் ப்ரிமியமும் வாங்கிக் கொழுத்தது தனியார் துறை. முகலாயர் காலம் போல, எல்லா அதிகாரங்களும், செல்வங்களும், டெல்லி சுல்தானேட்டில் குவியத் தொடங்கின.
இந்தக் காலகட்டத்தில், தெற்காசிய வேங்கைகள் எனப்படும் தென் கொரியா, சிங்கப்பூர், தைவான், ஹாங்காங் என்னும் இந்த நான்கு சிறு நாடுகள், உலகப் பொருளாதாரத்துடன் இணைந்து, தொழில்மயமாகி, மிக வேகமாக வளரத் தொடங்கியிருந்தன. மாவோ மறைந்த பின்னர், சீனாவைப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை நோக்கி நகர்த்தத் தொடங்கினார் டெங் ஜ்யாவ்பிங். நெருக்கடிநிலைக்குப் பின்னர் வலுவாக ஆட்சிக்கு வந்த இந்திராகாந்தி, அப்படி ஒரு வெளிப்படையான சீர்திருத்தத்தை முன்னெடுக்கத் தயங்கினார். ரகசியமான சீர்திருத்தங்கள் (Reforms by stealth) என்னும் அணுகுமுறையில், அந்நிய முதலீடுகள் மெல்ல மெல்ல அனுமதிக்கப்பட்டன.
இந்தியப் பொருளாதாரம் 1980களின் மத்தியிலிருந்து 6% வேக வளர்ச்சியைத் தொட்டு வளரத் தொடங்கியது. ஆனால், 1980களின் இறுதியில், அந்நியச் செலாவணிச் சிக்கலில் சிக்கிக்கொண்டது. ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணியில் ஆட்சிக்கு வந்த நரசிம்மராவ் ஆட்சியில், அவரது நிதியமைச்சரான மன்மோகன் சிங் பெரும் பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். உற்பத்தி, இறக்குமதி போன்ற தொழில் செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கும் லைசென்ஸ் ராஜ்ஜியத்தை ஒழித்தார். இறக்குமதி அனுமதிக்குப் பதிலாக இறக்குமதி வரிகள் விதிக்கப்பட்டன. செயற்கையாக வைக்கப்பட்டிருந்த ரூபாயின் மதிப்பு, சர்வேதேசச் சந்தை மதிப்புக்கு ஈடாக மாற்றப்பட்டது. அந்நிய முதலீடுகள் எளிமையாக்கப்பட்டன.
மன்மோகன் சிங்கின் கொள்கைகளின் காரணமாக, அன்று வரை கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த உற்பத்தித் தரப்புக்கு விடுதலை கிடைத்தது. மத்திய தரப்புக்குத் தேவையான நவீனத் தொழில்நுட்பப் பொருட்கள் எளிதில் கிடைக்கத் தொடங்கின. இதே காலகட்டத்தில், மென்பொருள் உருவாக்கம் மற்றும் சேவை என்னும் புதிய சேவைத் துறை உருவாகி எழுந்து, பொருளாதார வளர்ச்சிக்குக் கூடுதல் பலத்தைக் கொடுத்தது.
70களில், மத்திய கிழக்கு நாடுகள், பெட்ரோலிய வளத்தால் அதிவேகப் பொருளாதார வளர்ச்சியைக் கண்டன. அந்த நாடுகளில் பெரும் கட்டுமானங்களும் வணிக நிறுவனங்களும் உருவாகிவந்தன. அந்தப் பொருளாதாரச் செயல்பாடுகளில், உடல் உழைப்பு, மற்றும் அடிப்படைத் தொழில்நுட்பப் பணிகளுக்கு இந்திய உழைப்பாளிகள் பெருமளவில் செல்லத் தொடங்கினார்கள். இவர்கள் தங்களது சம்பாத்தியத்தில் பெருமளவை இந்தியாவுக்கு அனுப்பத் தொடங்கினார்கள். 90களில், இதே போன்ற நிகழ்வு மென்பொருள் துறையிலும் நிகழ்ந்தது.
இந்தப் பொருளாதார வளர்ச்சியின் பலன்கள், இந்தியாவின் ஊரக மற்றும் ஏழை மக்கள் வசிக்கும் தளங்களிலும் மேம்பாடுகளைக் கொண்டுவந்தன. வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிக்கும் மக்களின் சதவீதம் குறைந்துவந்தாலும், மக்கள்தொகைப் பெருக்கம் காரணமாக, வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை.
இந்தியாவின் வளர்ச்சி எல்லோருக்குமானதா?
வறுமையை நேரடியாக எதிர்கொள்ளும் விதமாக, 2005ஆம் ஆண்டு, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது. தொடக்கத்தில், வேளாண் வேலைகள் மிகக் குறைவாக இருக்கும் மாதங்களில் 100 நாட்களுக்கு வேலை கொடுக்கும் இந்தத் திட்டம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது. விடுதலை பெற்ற இந்தியாவில் முதன்முறையாக வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகளின் சதவீதமும், எண்ணிக்கையும் குறைந்தது. கிட்டத்தட்ட 14-20 கோடி மக்கள் வறுமைக்கோட்டைத் தாண்டி மேலே வந்தார்கள் என மதிப்பிடப்படுகிறது. இதே காலத்தில் உருவாக்கப்பட்ட கிராம சுகாதாரப் பணியாளர் திட்டமான ஆஷாவும் மக்கள்நல மேம்பாடுகளில், குறிப்பாக மகளிர் நலக் குறியீடுகளில், பெரும் மேம்பாட்டைக் கொண்டுவந்தன. இதே திசையில், 2013ஆம் ஆண்டு, கொண்டுவரப்பட்ட உணவுப் பாதுகாப்புச் சட்டமும் இணைந்துகொள்ள, கடந்த 20 ஆண்டுகளில் ஊரக வறுமை பெருமளவில் குறைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில்தான் இந்தியா, வரலாற்றில் இல்லாத வேகமான வளர்ச்சியை (7.7%) அடைந்தது.
1991ஆம் ஆண்டு நிதி மற்றும் வணிகச் சீர்திருத்தங்கள், இந்தியாவை உலகுடன் இணைத்தன. இந்தக் காலகட்டத்தில் புதிதாக மென்பொருள் துறை என்னும் மிக லாபகரமான ஏற்றுமதித் துறை இந்தியப் பொருளாதாரத்துடன் கூடுதலாக இணைந்துகொண்டது. இதன் விளைவாக, ஒரு குறிப்பட்ட அளவு சமூகம், உயர் வருமானத்தை அடைந்தது. இன்று இதன் அளவு 40-45 கோடி இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. இந்தச் சமூகம், இன்று வேளாண்மை, குறுந்தொழில் போன்ற சமூகத் தளங்களில் இருந்து முற்றிலும் வேறு தளத்தில் சீரான பொருளாதார வளர்ச்சியை அடைந்து அதன் பலன்களை அனுபவித்துவருகிறது.
ஆனால், 80-85 கோடி மக்கள் இருக்கும் ஊரக வேளாண்மை மற்றும் குறுந்தொழில் சூழல் அப்படி இல்லை. வேளாண்மையை நம்பி இருக்கும் மக்களின் பொருளாதார நிலைமை 90களுக்குப் பிறகு, மிகப் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. 2016இல் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்கம், இவ்விரண்டு துறைகளையும் பெருமளவு பாதித்தது. 2017ஆம் அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரியும், அதன் பின்னர் கொரோனாவும் உருவாக்கிய பாதிப்பிலும் இருந்து இந்தத் தளங்கள் மீளவே இல்லை என்கிறார் பொருளாதார அறிஞரான அருண்குமார். இத்தளங்களில் வளர்ச்சி குன்றிப்போயுள்ளது என்பது அவரது பார்வை.
வேலையின்மை, கடந்த 45 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதாக இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy – CMIE) சொல்லிவருகிறது. பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தால், ஏன் வேலைவாய்ப்பின்மை இவ்வளவு அதிகரிக்கிறது என்னும் கேள்வியை அவர் எழுப்புகிறார்.
பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடுகையில், இந்திய அரசுத் துறைகள், வேளாண்மை, குறுந்தொழில் போன்ற முறைசாராத் துறைகளின் உண்மையான பொருளாதாரப் புள்ளிவிவரங்களை எடுத்துக்கொள்வதில்லை. கார்ப்பரேட் மற்றும் பெரும்தொழில் நிறுவனப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஒட்டியே முறைசாராப் பொருளாதாரமும் வளர்ந்திருக்கும் என்னும் அனுமானத்தின் அடிப்படையில் அவை கணக்கிடப்படுகின்றன. இது தவறாகும்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகள் 2.5% வரை அதிகரித்துக் காண்பிக்கப்படுகின்றன என பிரதமர் மோடியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் எழுதியிருந்ததையும் நாம் இங்கே நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
வருங்கால வளர்ச்சிக்கான வழி!
கடந்த 35 ஆண்டுகளை ஒரு பருந்துப் பார்வையில் பார்க்கையில், ஒன்று புலனாகிறது. 91ஆம் ஆண்டு சீர்திருத்தங்களுக்குப் பிறகு, உற்பத்தி தரப்பில் செயற்கையாக வைக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுவதும் விலக்கப்பட்டதும், நுகர்பொருள் பொருளாதாரத்தில் ஒரு வளர்ச்சி ஏற்பட்டது. அத்துடன் மென்பொருள் துறையின் அசுர வளர்ச்சியும் இணைந்துகொள்ள, நகர்ப்புறக் கட்டுமான வளர்ச்சி என்னும் முக்கியமான துறையும் வளர்ந்தது. ஊரக வேலைவாய்ப்புத் திட்டமும், உணவுப் பாதுகாப்புத் திட்டமும் ஓரளவு ஊரக மேம்பாட்டைக் கொண்டுவந்தன. ஆனால், இவற்றின் பங்களிப்பும், காலமும் இன்று ஒரு முதிர்நிலையை அடைந்துவிட்டன.
ஆனால், இதற்கு மேலும் இந்தியப் பொருளாதாரம் வளர வேண்டுமெனில், அது வெறும் நகர்ப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டால் மட்டுமே சாத்தியமாகாது. 80-85 கோடி ஊரக மக்களின் வாழ்வாதாரமும், வருமானமும் மேம்பட வேண்டும். அதற்கு அடிப்படையான வேளாண் வருமான மேம்பாடும், சிறு/குறு தொழில்களின் மறுமலர்ச்சியும் தவிர்க்க முடியாதவை.
பாஜகவின் தவறான பொருளாதார அணுகுமுறை!
2017ஆம் ஆண்டு ஜி.எஸ்.டி அறிமுகத்துக்குப் பிறகு, தொடர்ந்து 6 காலாண்டுகள், பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துகொண்டே வந்தது. அதை ஆராய்ந்த, பொருளாதார அறிஞர்கள் ஆலோசகர்கள் அனைவரும், மக்களின் கையில் உபரி வருமானம் வரும் வகையில், ஊரக மக்களுக்கான நலத்திட்டங்களில் அரசு முதலீடுகளைச் செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு 180 டிகிரி எதிரான பாதையைத் தேர்ந்தெடுத்தார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வருமான வரியை 8-10% வரை குறைத்தார். இது அரசுக்கு, வருடம் 1 லட்சம் கோடி வரை வருமான இழப்பை ஏற்படுத்தும் என நிதியமைச்சகம் தெரிவித்தது.
வரிவிலக்கில் கிடைக்கும் 1 லட்சம் கோடி சேமிப்பில் கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிய முதலீடுகளைச் செய்வார்கள். அதன் உற்பத்தி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் எனச் சொன்னார் நிதியமைச்சர்.
வளர்ச்சி வேகம் குறைவது என்பது, பொருளாதாரத்தில் தேவை (demand) மந்தமாக இருப்பதன் அறிகுறி. தேவை குறைந்தால், நிறுவனங்களில் ஏற்கெனவே இருக்கும் கொள்ளளவே உபயோகப்படுத்தாமல் இருக்கும். அப்படி இருக்கும் நிலையில், நிறுவனங்கள் எதற்கு கொள்ளளவை அதிகரிக்க, புதிய முதலீடுகளைச் செய்யப் போகிறார்கள், அந்தக் கூடுதல் முதலீட்டால் எப்படி தேவைகள் அதிகரிக்கும் என எழுந்த கேள்விகளுக்கு பதில் இல்லை.
இந்த வருமான இழப்பைச் சரிசெய்ய, நிதியமைச்சகம், பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை உயர்த்தியது.
ஒரே சமயத்தில், இந்தியாவின் உயர் 0.1% சமூகத்துக்கு 1 லட்சம் கோடி வரிச்சலுகையும், அதைச் சமன்செய்ய 99% மக்கள் புழங்கும் பொருளாதாரத்துக்கு 2.5 லட்சம் கோடி கூடுதல் வரிவிதிப்பும் செய்தார் நிதியமைச்சர்
கார்ப்பரேட் லாபம் பொருளாதாரத்தில் நுகர்வை அதிகரிக்காது. நுகர்வு அதிகரிக்காமல், பொருட்கள்/ சேவைகளுக்கான தேவைகள் அதிகரிக்காது. மாறாக, பெரும்பான்மை ஏழை/நடுத்தர மக்கள் மீதான 2.5 லட்சம் கோடி கூடுதல் வரி, நுகர்வைக் (Demand) குறைக்கும். அதனால், தேவைகள் குறையும். அது தொடர்ந்த பொருளாதார மந்தத்தை உருவாக்கும்.
பாஜகவின் இந்தத் தவறான அணுகுமுறையால், இந்தியாவின் உயர் 0.1% மக்களிடம் மேலும் செல்வம் சேர்ந்தது. ஏழைமக்கள் மேலும் ஏழையாகிப் போனார்கள்.
2014 முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலத்தில், இந்த வருமான ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து, 2022 ஆம் ஆண்டு, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்ததாக, பிரெஞ்சு பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டி (மற்றும் இருவர்), ஒரு ஆய்வறிக்கையில் கூறுகிறார். பொருளாதாரத்தின் உயர் 1% மக்களிடம், நாட்டின் 40% வளம் குவிந்திருக்கிறது என்கிறது அந்த ஆய்வறிக்கை
இந்திய அரசமைப்புச் சட்டம், பொருளாதார மற்றும் சமூகநீதியைத் தன் இலக்குகளில் ஒன்றாகக் கூறுகிறது. ஆனால், பாஜகவின் பொருளாதார அணுகுமுறை, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இலக்குகளுக்கு முற்றிலும் எதிரான ஒன்றாக இருக்கிறது.
மாற்றம் தேவை!
பொருளாதாரத்தின் உயர் 0.1% மக்களுக்கான சலுகைகள், இதர மக்களின் மீதான அதீத வரிவிதிப்பு என்பது ஆங்கிலேயர் காலத்து அணுகுமுறை. ஏழைகளைச் சுரண்டிக் கொழுக்கும் வழி.
இது ஏற்றத்தாழ்வுகளைத் தொடர்ந்து அதிகரித்து, சமூகப் பிளவுகளை உருவாக்கும். நீண்டகால நோக்கில், பெரும் சீரழிவுக்கு வழிவகுக்கும்.
முக்கியமாக, இன்று உலகெங்கும் பொருளாதாரங்கள், நுகர்வை நம்பியிருக்கின்றன. உற்பத்தியால் பொருளாதாரம் வளர்ந்த காலம் இன்றில்லை. 80-85 கோடி மக்களின் கைகளில் உபரி வருமானம் இல்லாவிட்டால், பொருளாதாரத்தில் தேவை அதிகரிக்காது. இது பொருளாதார வளர்ச்சி வேகத்தைப் பாதிக்கும். எனவே இந்தியப் பொருளாதாரம், தன் மந்த நிலையை விட்டு, வேகமாக வளர வேண்டுமெனில், 80-85 கோடி மக்களின் பொருளாதார நிலை வளர வேண்டுமே ஒழிய, அதீத வரிவிதிப்பால் குறையக் கூடாது.
இந்தியா போர்க்கால அடிப்படையில் சரிசெய்தாக வேண்டிய பிரச்சினை இது.
அதன் முதல்படியாக, எரிபொருட்களின் மீதான வரிகளைக் குறைத்து, ஏழை மக்கள் தரப்புக்கு ஆசுவாசம் அளிக்க வேண்டும். அது ஏழை/நடுத்தர மக்களின் கைகளில் உபரி நிதியைத் தரும். அந்த உபரியில் ஒரு பகுதியை அவர்கள் சோப்பு, ஷாம்பூ, கைபேசி என நுகர்பொருட்களை வாங்க உபயோகிப்பார்கள். ஊரக நுகர்வு அதிகரிப்பு, பொருளாதாரத்தில் கூடுதல் தேவையை உருவாக்கும். அது பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும்.
எனவே முற்போக்கு வரிவிதிப்பு (Progressive taxation) முறை மேலும் வலுப்படுத்தப்பட்டு, அடிப்படைப் பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான வரிவிதிப்பை ஆய்வுக்கு உள்ளாக்க வேண்டும். முடிந்தால் குறைக்க வேண்டும்.
வேளாண்மையின் லாபம் அதிகரிக்கும் திட்டங்களைத் தொடங்க வேண்டும். அது வெண்மைப் புரட்சி போல, உழவர்களுக்கு லாபமான திட்டங்களாக இருக்க வேண்டும். அதானி போன்ற ஒட்டுண்ணி முதலாளிகளுக்கு லாபம் தருவதாக இருக்கக் கூடாது.
சிறு/குறு தொழில்களுக்கான ஆதரவு பெருமளவு உயர்த்தப்பட வேண்டும்.
வேளாண்மையும், சிறு/குறு தொழில்களும் இந்தியாவில் 70% மக்களுக்கான வாழ்வாதாரம். இவை மேம்பட்டால், இந்தியா மேம்படும்,. ஊரகப் பொருளாதாரத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டால், இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வேக வளர்ச்சியை அடையும். வரப்புயர, நீரும் நெல்லும் குடியும் கோனும் உயர்வார்கள்.
அமர்த்திய சென் சொல்வது போல, சந்தைப் பொருளாதாரமும், (ஒட்டுண்ணி முதலாளித்துவம் அல்ல), மக்கள்நல அரசும் இணைந்தால் பொருளாதாரம் மேம்படும். கூடுதலாக நுண்தொழில் அலகுகளான வேளாண்மையும் குறுந்தொழில்களும் மேம்படும் சூழலை உருவாக்க வேண்டும். அதுவே இந்தியாவை உண்மையான வேக வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும். தமிழ்நாட்டின் வளர்ச்சி வேகக் குறியீடுகள் நமக்குச் சொல்லும் நீதி இதுதான்.
- பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


