Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
16 நிமிட வாசிப்பு

நான்கு பிரதமர்களும் இந்திய அமெரிக்க உறவும்

நான்கு பிரதமர்களும் இந்திய அமெரிக்க உறவும்
X




இந்திரா காந்தி

1971 தேர்தலில், வறுமையை ஒழிப்போம் (Garibi Hatao) என்னும் கவர்ச்சிகரமான தேர்தல் முழக்கத்தை வைத்து, 327 இடங்களை வென்று, தனிப் பெரும்பான்மை பெற்று, மார்ச் 18ஆம் தேதி, மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார் இந்திரா காந்தி.

ஆட்சியில் அமர்ந்த உடனேயே அவரது பிரச்சினைகள் தொடங்கிவிட்டிருந்தன. மார்ச் 25ஆம் தேதி, பாகிஸ்தான் ராணுவம், கிழக்கு பாகிஸ்தானில், வங்காளிகளுக்கு எதிரான மிகப் பெரும் தாக்குதலைத் தொடர்ந்தது. வங்கதேச விடுதலைப் போராளிகள், முக்தி வாகினி என்னும் அமைப்பாகத் திரண்டு, பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்துத் தாக்கினார்கள்.

இந்த மோதல்களில் பாதிக்கப்பட்ட வங்கதேசக் குடிமக்கள், இந்தியாவுக்குள் அகதிகளாக வரத் தொடங்கினார்கள். இது இந்தியாவுக்குப் பெரும் பொருளாதாரச் சுமையாக மாறத் தொடங்கியது.

இந்தப் போரில், வங்கதேச விடுதலை அமைப்பான முக்தி வாகினிக்கு இந்தியா மறைமுகமாக ஆதரவு அளிக்கத் தொடங்கியது. உலக அளவில் வங்க விடுதலைப் போருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பத் தொடங்கியது.

பாகிஸ்தான் ராணுவம், வங்க தேசத்தில், மிகப் பெரிய அளவில் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை என இறங்கியதும், இது போரில்தான் முடியும் என்பது தெள்ளத் தெளிவானது. இந்தியாவின் எதிர்க்கட்சிகள் அனைத்துமே, இந்தியா போரில் ஈடுபட்டு வங்கதேச விடுதலைக்கு உதவ வேண்டும் என ஆளும்கட்சிக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கின.

ஜூன் மாத வாக்கில், போர் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஜூன் தொடங்கி அக்டோபர் வரை, கிழக்கு இந்தியாவிலும், வங்கதேசத்திலும், பருவ மழை காரணமாக நதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடும். எனவே, இக்காலத்தில், தரைவழித் தாக்குதல் நடத்துவது கடினம் என்று இந்திய ராணுவத் தளபதி மானெக்‌ஷா சொல்லிவிட்டார்.

இந்தக் காலகட்டத்தில், தனது ஆலோசகர்களின் உதவியோடு, சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவது போல முக்கியமான நகர்வுகளைத் தொடங்கினார் இந்திரா காந்தி.

1971 ஆகஸ்டு வாக்கில், அன்றைய சோவியத் ஒன்றியத்துடன் 20 ஆண்டுகளுக்கான ஒரு நட்புறவு ஒப்பந்தத்தை உருவாக்கிக்கொண்டார். ஒரு நாட்டுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், இன்னொரு நாட்டின் ராணுவம் உதவிக்கு வரும் என்பதே அதன் முக்கிய அம்சம்.

1971 அக்டோபர் - நவம்பர் மாதங்களில், கிழக்கு பாகிஸ்தானில் நடந்துவந்த இனப்படுகொலையை எதிர்த்து, வங்கதேச விடுதலைப் போராட்டத் தரப்புக்கு ஆதரவு தேடும் நோக்கில், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குப் பயணம் செய்து, இறுதியாக அமெரிக்கா சென்றடைந்தார் இந்திரா காந்தி. ஐரோப்பிய நாடுகள், கிழக்கு பாகிஸ்தானில் நிகழ்ந்துவந்த இனப்படுகொலையைக் கண்டித்தாலும், இந்தியாவின் நிலையை ஆதரிப்பது தொடர்பாக எந்த உறுதியும் கொடுக்கவில்லை. அது பனிப்போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டம்.

அமெரிக்கா மிகத் தீர்மானமாக பாகிஸ்தான் அரசை ஆதரித்தது. அதிபர் நிக்சனுடனான இந்திரா காந்தியின் பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. வங்கதேச உள்நாட்டுக் கலவரத்தில் இந்தியா தலையிட்டால், விளைவுகள் விபரீதமாக இருக்கும் என மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையில், இந்திரா காந்தி, ‘இந்தியா, அமெரிக்காவைத் தன் நண்பராகக் கருதுகிறது. உயர் அதிகாரியாக அல்ல. தனது வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள இந்தியாவுக்குத் தெரியும்’, என்று கூறியதாக அண்மையில் வெளியிடப்பட்ட அமெரிக்க அரசுக் குறிப்புகள் சொல்கின்றன.

வங்கதேசத்தில் விடுதலை வேட்கை கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. இறுதியில் இந்தியா எதிர்பார்த்தது போலவே, பாகிஸ்தான் இந்தியா மீது 1971 டிசம்பர் 3ஆம் தேதி போர் தொடுத்தது. பதிலுக்கு இந்தியாவும் தனது தாக்குதலைத் தொடங்கியது.

இதைக் கண்டித்த அமெரிக்கா, யு.எஸ்.எஸ். எண்டர்பிரைஸ் என்னும் அணுசக்திக் கப்பல் தலைமையில், 10 கடற்படைக் கப்பல்களை வங்காள விரிகுடாவுக்கு அனுப்பி வைத்தது.

இந்திய-சோவியத் நட்புறவு ஒப்பந்தத்தின் படி, சோவியத் ஒன்றியம் தனது அணுசக்திக் கப்பற்படையை அமெரிக்க கப்பல்களின் பின்னே கொண்டுவந்து நிறுத்தியது. இரு வல்லரசுகளின் படைகளும் எதிரெதிர நிற்க, அங்கே முன்னகர முடியாத நிலை உருவாகியது.

இந்தியாவை அச்சுறுத்த நினைத்த அமெரிக்காவின் போர் உத்தி முறியடிக்கப்பட்டது. வங்கதேசப் போரில், பாகிஸ்தான் ராணுவம், தோல்வியை ஒப்புக்கொண்டு இந்திய ராணுவத்திடம் சரணடைந்தது.

இதையொட்டி, இந்தியா தனது நீண்டகால பாதுகாப்புக் கொள்கையை மறுபரிசீலனை செய்தது. அணு ஆயுதம் என்னும் எல்லாவற்றையும் அழிக்கக் கூடிய ஆயுதம் கொண்ட எந்த நாடும், இந்தியாவை எளிதில் பணிய வைத்துவிட முடியும் என்னும் உண்மை நமது அரசுக்கு இந்தப் போரில் ஐயந்திரிபற புரிந்தது. 1962இல், இந்தியாவைத் தோற்கடித்த அண்டை நாடான சீனத்திடம் அணு ஆயுதம் இருப்பது எவ்வளவு பெரும் அபாயம் என்பதை இந்தியா உணர்ந்தது.

எனவே, பாதுகாப்புக்காக நம்மிடம் அணு ஆயுதம் அவசியம் என முடிவெடுத்து, அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சிகளில் இந்தியா இறங்கியது.

1974 ஆம் ஆண்டு, தனது முதல் அணுகுண்டு வெடிப்புப் பரிசோதனையை வெற்றிகரமாக இந்தியா நடத்தியது. இதனால், வெறுப்புற்ற அமெரிக்கா, அணுசக்தி சப்ளையர் குழு (Nuclear Suppliers Group (NSG) என்னும் உலகளாவிய குழு ஒன்றை உருவாக்கி, இந்தியாவுக்கு அணுசக்தி தொடர்பான எந்த தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள், யுரேனியம் உள்ளிட்ட கச்சாப் பொருட்கள் எவற்றையும், எந்த நாடும் தரக் கூடாது என்னும் ஒரு உலகளாவிய தடையை விதித்தது..

இதனால் ஏற்பட்ட பின்னடைவைச் சரிசெய்ய, இந்தியா, தன்னளவில், உள்நாட்டிலேயே அணுசக்தித் தொடர்பான தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

அடுத்த 20 ஆண்டுகளில், மீண்டும் அணுசக்தி வெடிப்புப் பரிசோதனைக்கு இந்தியா தயாராகியது.

வாஜ்பாய்

1998 தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமராகப் பதவியேற்ற வாஜ்பாயிடம், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், ஒரு ரகசிய சீட்டைக் கொடுத்தார். அதில், ‘அணுசக்திப் பரிசோதனைக்கு இந்தியா தயாராக இருக்கிறது’, என்னும் செய்தி இருந்தது.

1998 ஆம் ஆண்டு வாஜ்பாய், இந்தியாவின் இரண்டாவது அணுஆயுதப் பரிசோதனையை நடத்தினார். அதைத் தொடர்ந்து இந்தியாவின் மீது அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள், மேலும் தடைகளை விதித்தன.

ஆனால், இடைப்பட்ட 24 ஆண்டுகளில், உலகின் அரசியல் சூழல் மாறியிருந்தது. புதிய பொருளாதாரக் கொள்கைகளூடே இந்தியா உலகமயமாக்கலை உள்வாங்கத் தொடங்கியிருந்தது. சீனா பெரும் பொருளாதார சக்தியாக வளரத் தொடங்கியிருந்தது. சோவியத் ஒன்றியம் வெடித்துச் சிதறி, உலக அரங்கில் தன் அரசியல், பொருளாதாரத் தளங்களில், தன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டிருந்தது.

2001 ஆம் ஆண்டில், தாலிபான் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்திய தாக்குதல், உலக அரசியல் களத்தை மாற்றியது. இதை மிகவும் சாமர்த்தியமாக உபயோகித்த பிரதமர் வாஜ்பாய், இந்தக் கணத்தில் அமெரிக்காவின் பக்கம் நாங்கள் இருக்கிறோம் என பகிரங்கமாக அறிவித்தார். இதையடுத்து, இந்தியாவும் அமெரிக்காவும், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்காக, ஒரு பொதுவான குழுவை அமைத்தார்கள்.

2001 ஆண்டில், இந்தியாவும் அமெரிக்காவும் பரஸ்பர உறவுக்கான அடுத்த படிகள் (Next Steps in Strategic Partnership [NSSP]) என்னும் முன்னெடுப்பைத் தொடங்கினார்கள். இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தகம், பாதுகாப்பு முதலிய துறைகளில் நெருங்கி வரத் தொடங்கின. ஆனால், 1974, 1998 ஆண்டுகளில் இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட அணுசக்தித் தடைகள் இன்னும் அப்படியே இருந்தன.

மன்மோகன் சிங்:

வாஜ்பாயிக்கு அடுத்தபடியாகப் பதவிக்கு வந்த மன்மோகன் சிங், அமெரிக்கவுடனான உறவை மேலும் வலுப்படுத்த முடிவெடுத்தார். NSSPயைத் தொடர்ந்து மேலும் பேச்சு வார்த்தைகள் நடந்தன. இந்தியாவும் அமெரிக்காவும் ஓர் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவெடுத்தன.

தொடக்கத்தில் அமெரிக்கத் தரப்பு மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்தது. இந்தியாவிலுள்ள அனைத்து அணுசக்தி நிலையங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் பரிசோதனைக்குக் கீழ் வரவேண்டும், இந்தியா அணுஆயுதப் பரிசோனைகளைச் செய்யக் கூடாது, அணுசக்தி மின்நிலையங்களில் விபத்துக்கள் ஏற்பட்டால், அதற்கு அமெரிக்க நிறுவனங்கள் பொறுப்பேற்காது என்பன உட்பட்ட பல ஷரத்துகள் இந்தியாவின் நலன்களுக்கு எதிரானவை.

இதை இடதுசாரிகள் மிகக் கடுமையாக எதிர்த்தனர். அணுசக்தித் துறையின் முன்னாள் தொழில்நுட்பத் தலைவர்கள் பலரும் எதிர்த்தனர்.

கூட்டணி ஆட்சி, மக்களாட்சி போன்ற அரசியல் சூழலில், தனக்குள்ள நெருக்கடிகளை பிரதமர் மன்மோகன் சிங் மிகப் பகிரங்கமாகவே அறிவித்தார். இந்தியாவுடனான இந்த ஒப்பந்தம், அமெரிக்க அணுசக்தித் துறை தனியார் நிறுவனங்களுக்கான பெரும் தொழில் வாய்ப்பு என்பதை உணர்ந்த அமெரிக்கத் தரப்பு இறங்கி வந்தது.

அணுசக்தித் துறை நிபுணர்களான அனில் ககோட்கர், ரவி க்ரோவர் முதலானவர்களை முன்னிறுத்தி இந்தியா தனது தரப்பு வாதங்களை முன்வைத்தது. மூன்று ஆண்டுகள் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய - அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது.

மன்மோகன் சிங் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்த கம்யூனிஸ்டுகள் இதை எதிர்த்து, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். அணு ஆயுத ஒப்பந்தத்துக்காகத் தன் அரசைப் பணயம் வைத்தார் மன்மோகன் சிங். காங்கிரஸ் கட்சியிலேயே இதற்கு எதிராக குரல்கள் எழுந்தன. ஆனால், சமாஜ்வாதி கட்சியின் உதவியோடு, அந்த ஆபத்தைக் கடந்தார் மன்மோகன் சிங்.

அணு ஆயுத சப்ளையர்கள் குழு (Nuclear Suppliers Group [NSG]) இந்தியாவின் மீது விதித்திருந்த தடைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. இதன் மூலம், இந்தியா, தனது அணுசக்தித் துறைக்கு மிகவும் அத்தியாவசியமான மூலப் பொருளான யுரேனியத்தை எளிதாக இறக்குமதி செய்யத் தொடங்கியது. அமெரிக்காவுடனான இந்தியாவின் ஒப்பந்தம், மறைமுகமாக இந்தியாவை ஒரு அணு ஆயுத சக்தி என்பதையும் அங்கீகரிக்கிறது. இந்த இரண்டு நகர்வுகளும் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான மைல்கற்கள்.

இதே காலகட்டத்தில், அமெரிக்காவின் நிதித் துறையில் மிகப் பெரும் பூகம்பங்கள் வெடிக்கத் தொடங்கின. 2008 செப்டெம்பரில் லெஹ்மான் சகோதரர்கள் என்னும் அமெரிக்காவின், உலகின் மிக முக்கியமான நிதி நிறுவனம் மூழ்கியதைத் தொடர்ந்து, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன.

2008 ஆம் ஆண்டு நடந்த G-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு, மன்மோகன் முன்வைத்த அவதானிப்புகள் அன்று உலகின் பல முக்கியத் தலைவர்களாலும் கூர்ந்து கவனிக்கப்பட்டன.

2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பை நகரின் மீது தாக்குதல் நடத்தினர். பல்வேறு இடங்களில் நடந்த இந்தத் தாக்குதல்களில், ஒன்பது பயங்கரவாதிகளும், 175 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்னும் பயங்கரவாதி உயிருடன் பிடிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வு இந்திய சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கின. எதிர்க்கட்சிகள், பதிலுக்குப் பதில் பாகிஸ்தான் மீது தாக்குதல்களை நடத்த வேண்டும் என அறிக்கை விடுத்தனர். இந்திய பாதுகாப்புப் படைகளின் நிலையும் அதுவாகவே இருந்தது.

ஆனால், மன்மோகன் தலைமையிலான அரசு, பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் செயற்கைக் கோள் தொலைபேசி உரையாடல்கள் வழியேயும், பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கஸாப் விசாரிக்கப்பட்டு அவர் ஒரு பாகிஸ்தான் பிரஜை என்பதையும் நிறுவி, இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் உளவுத்துறை மற்றும் அரசின் பங்கை உலகநாடுகள் முன்பு ஆதாரங்களுடன் வைக்க வேண்டும் என்னும் முடிவை எடுத்தது. அதன் படி தரவுகள் திரட்டப்பட்டு உலக நாடுகளின் முன்பு வைக்கப்பட்டன. ஆனால், இது இந்திய சமூகத்தின் ஒரு பகுதிக்கும், முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் திருப்தி தருவதாக இல்லை.

ஜார்ஜ் புஷ்ஷை அடுத்து, 2009ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற ஒபாமா, பிரதமர் மன்மோகன் சிங்கை தனது முதல் அரசுமுறை விருந்தாளியாக அழைத்து மரியாதை செய்தார். 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம், G-20 மாநாட்டில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், “பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகத்துக்கே மிகச் சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளார்; கடினமான காலகட்டங்களில் உலகை வழிநடத்த உதவியுள்ளார். ஜி20 அமைப்பில், பிரதமர் பேசும்போது, மக்கள் அதனைக் கூர்ந்து கவனிக்கிறார்கள். அதற்குக் காரணம், குறிப்பாக பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்த அவரது ஆழமான அறிவே ஆகும்" என்று ஒபாமா தனது நேர்மறை அவதானிப்பை முன்வைத்தார்’

அதன் பின்னர் நவம்பர் 2010 ல் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஓபாமா, இந்திய நாடாளுமன்றத்தில் பேசுகையில், “மேலும், பாகிஸ்தான் தலைவர்களிடம், அவர்களின் எல்லைகளுக்குள் உள்ள பயங்கரவாதப் புகலிடங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், மும்பை தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்த பயங்கரவாதிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்றார். இது இந்திய அமெரிக்க உறவில் ஒரு வரலாற்றுத் தருணமாகும். அதிபர் கிளிண்டன் காலம்வரையிலும் கூட, அமெரிக்கா, இந்தியாவையும், பாகிஸ்தானையும் சமமாகப் பாவித்து வந்தது. ஆனால், ஓபாமாவின் இந்த வாக்கியங்கள், அமெரிக்கா, இன்று எந்தத் தரப்பில் நிற்கிறது என்பதைத் தெளிவுபடுத்திவிட்டன.

மன்மோகன் சிங் அரசின் முன்பு இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று, பழிக்குப் பழிவாங்கச் சொன்ன எதிர்க்கட்சிகளின், பாதுகாப்புப் படைகளின் வழி சென்று, பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது. இன்னொன்று, பொறுமையாக தரவுகள் வழியே பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு என்பதை உலகின் முன் நிலைநிறுத்தி, அதற்குப் பன்னாட்டு ஆதரவைக் குறைத்து, பாகிஸ்தானுக்குப் பின்னடைவை ஏற்படுத்துவது. இதில் இரண்டாவது வழியை மன்மோகன் சிங் அரசு தேர்ந்தெடுத்தது.

நரேந்திர மோடி

2014ஆம் ஆண்டு, மிகப் பிரபலமான அரசியல் தலைவராக, ‘நல்ல காலம் வரவிருக்கிறது’, என்னும் முழக்கத்துடன் இந்தியாவின் பிரதமரானார் மோடி. பன்னாட்டு அரங்கில் இந்தியாவின் நிலையை உயர்த்த வேண்டும் என்னும் நோக்கத்துடன் உலகில் உள்ள பலநாடுகளுடனான உறவுகளை குறிப்பாக அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்த முயன்றார்.

ஆனால், இதை எதிர்க்கட்சிகள் விமரிசித்தன. அதிலும், ‘வெளியுறவு என்பது, பிறநாட்டுத் தலைவர்களைக் கட்டியணைப்பதாலோ, அவர்களுடன் ஊஞ்சலில் ஆடுவதாலோ, அழைக்காமல் சென்று பிரியாணி சாப்பிடுவதாலோ மேம்படாது’, என அதிகம் பேசாத மன்மோகன் சிங் விமரிசித்தது ஆச்சர்யம்.

வழக்கமான வெளியுறவு எல்லைகளைத் தாண்டி, தனது தேர்தல் முழக்கமான, ‘அப் கி பார் மோடி சர்க்கார்’, என்பதைக் கொஞ்சம் மாற்றி, ‘அப் கி பார் ட்ரம்ப் சர்க்கார்’, என அமெரிக்காவில், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஆதரவாகச் சொன்னது கொஞ்சம் அதீதமாகப் பார்க்கப்பட்டது.

இரண்டாம் முறை அதிபராகும் முயற்சியில் ட்ரம்ப் தோற்றுப் போக, டெமாக்ரட் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதிபரானார். ஆனால், இந்திய- அமெரிக்க உறவுகளில் விரிசல்கள் விழவில்லை. மாறாக, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு தொடர்ந்து நன்மைகள் விளைந்து வந்தன. இந்தியர்களுக்கு H-1 B விசா கிடைப்பதில் எந்தப் பிரச்சினைகளும் இருக்கவில்லை

ஆனால், பைடனுக்குப் பின் மீண்டும் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், ட்ரம்பின் நடவடிக்கை இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், உலகுக்கே பெரும் தலைவலியைத் தருவதாக இருக்கிறது. எதிலும் தடாலடியான நடவடிக்கை, சீராக இல்லாத இறக்குமதித் தீர்வை தொடர்பான நிலைப்பாடுகள் என உலகின் பல நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் தருபவராக மாறிப் போனார்.

2025 ஏப்ரல் மாதத்தில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நகரில், 26 சுற்றுலாப் பயணிகள், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக இந்தியா, மே 7 ஆம் தேதி, ‘ஆப்பரேஷன் சிந்தூர்’, என்னும் ஒரு தாக்குதலை பாகிஸ்தான் மீது தொடுத்தது. இதில் பாகிஸ்தானின் கீழ் இருக்கும் காஷ்மீர் பகுதியில் இருந்த பயங்கரவாதக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன என இந்தியா அறிவித்தது.

ஆனால், இந்தப் பிரச்சினையில், தனக்கு எப்படியேனும் அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என பொதுவெளியில் சொல்லிக்கொண்டிருந்த ட்ரம்ப், உள்ளே புகுந்து, ‘நான் தான் இந்தோ-பாக் சண்டையை நிறுத்தினேன். இறக்குமதியின் மீது அதிக வரி விதித்துவிடுவேன் என மிரட்டி போரை நிறுத்தினேன்’, என உளறினார். இது இந்திய அரசுக்கும், குறிப்பாக நரேந்திர மோடிக்கும் பெரும் சங்கடத்தை உருவாக்கியது.

இந்திய அரசு, அனைத்துக் கட்சி குழுக்களை உலகமெங்கும் அனுப்பி, இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்ல அனுப்பியது.

ஆனால், 2008 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதலின்போது, பாகிஸ்தான் தனது பயங்கரவாதச் செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தெளிவாகச் சொன்ன அமெரிக்காவின் நிலை, 2025 தாக்குதலின்போது, மாறியிருக்கிறது. இந்தப் பூசலை நான்தான் தலையிட்டு போரை நிறுத்தினேன் என்னும் அமெரிக்க அதிபரின் பேச்சு, இந்தத் தாக்குதலுக்குக் காரணமான பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயலைக் கண்டிக்கவில்லை. மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் என இரண்டு நாடுகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் இடத்துக்கு அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை பின்னகர்ந்துவிட்டது

இதைத் தொடர்ந்து, இந்தியர்களுக்கான H-1 B விசா, இந்திய இறக்குமதிகளின் மீதான அதீத இறக்குமதி வரி போன்ற ட்ரம்ப்பின் முன்னெடுப்புகள் எல்லாமே ‘I win, you lose’ என்னும் ஒருவிதமான அடாவடித்தனமான மிரட்டல்களாக உள்ளன.

ஆகஸ்டு மாத வாக்கில், இந்திய ஜவுளி ஏற்றுமதிகளுக்கு 50% இறக்குமதி வரியை அறிவித்தார் ட்ரம்ப். இதனால், ஆயத்த ஆடை ஏற்றுமதிக்குப் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. முதலில் 25% இறக்குமதி விதித்த ட்ரம்ப், பின்னர், ரஷ்யாவிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்ததற்கான தண்டனையாக கூடுதல் 25% வரியை அறிவித்தார்.

50% இறக்குமதி வரி, திருப்பூரில் இருந்தது ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளின் விலையை அதிகரிக்கும். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டீ ஷர்ட்களின் விலை 16.4 டாலராக இருக்கையில், சீனாவின் டீ ஷர்ட் 14.2 டாலருக்கும், பங்களாதேஷின் டீ ஷர்ட் 13.2 டாலருக்கும், வியட்நாமின் டீ ஷர்ட் 12 டாலருக்கும் அமெரிக்க இறக்குமதியாளர்களுக்குக் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது என பிபிசி செய்திக் குறிப்பு கூறுகிறது.

25% இறக்குமதி வரி இருந்தால் கூட, இந்திய டீ ஷர்ட்களின் விலை மற்ற நாடுகளை விட அதிகமாக இருக்கும். திருப்பூரின் வணிகம் வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளுக்குச் சென்றுவிடும் நிலை உருவாகியுள்ளது.

தற்போதைய நிலையில், மாதம் ரூ. 2,000 கோடி ஏற்றுமதி வணிகத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மற்ற நாடுகளுடன் போட்டி போட விலையைக் குறைத்தால், அது 20-25% வரை நஷ்டம் ஏற்படுத்தும் (மாதம் கிட்டத்தட்ட ரூ. 400-500 கோடி)

இந்த நிலையில் ஏற்றுமதியாளர்களுக்கு உதவ, டீ ஷர்ட் உற்பத்திக்கான கச்சாப் பொருட்கள் உற்பத்தியின் மீதான இறக்குமதி வரிகளை நீக்கியிருக்கிறது ஒன்றிய அரசு. ஆனால், இது போதாது என்கிறார்கள் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்

இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மேற்கொண்டு நடவடிக்கைகள் எதையும் முன்னெடுக்காமல், அமைதியாக இருப்பது, திருப்பூர் ஏற்றுமதியாளர்களைப் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து யாரோ லாபம் பார்க்க, அதற்கான விலையை நாம் செலுத்த வேண்டிய நிலை இன்று என அவர்களில் பலர் புழுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்வுகளைப் பார்க்கையில், அமெரிக்க இந்திய உறவுகளில், இந்தியாவுக்குப் பின்னடைவு எனத்தான் அனுமானிக்க வேண்டியிருக்கிறது. இதை எப்படி இந்திய அரசு எதிர்கொண்டு, தீர்வுகளை அடையப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it