Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
4 நிமிட வாசிப்பு

பாரம்பரிய ஐடி நிறுவனங்களின் வீழ்ச்சியும் ஆந்த்ரோபிக்கின் எழுச்சியும்

ஆந்த்ரோபிக்கின் புதிய ஏஐ மென்பொருள் வருகையால், ஐபிஎம் முதல் டிசிஎஸ், இன்போசிஸ் வரை பாரம்பரிய ஐடி நிறுவனங்கள் மிகப் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

பாரம்பரிய ஐடி நிறுவனங்களின் வீழ்ச்சியும் ஆந்த்ரோபிக்கின் எழுச்சியும்
X

உலகின் முன்னணி ஐடி ஜாம்பவான் ஐபிஎம் மிகப் பெரும் நெருக்கடியில் இருக்கிறது.

ஐபிஎம் மட்டுமல்ல… டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ போன்ற இந்திய ஐடி நிறுவனங்களும் இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளன.

பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஐபிஎம் நிறுவனத்தின் பங்குகள் 27% வரை சரிந்துள்ளன. இது கடந்த 50 ஆண்டுகளில் ஐபிஎம் சந்தித்திராத ஒரு மாத வீழ்ச்சி. அதேபோல், இந்திய ஐடி பங்குகளும் சுமார் 21% வரை சரிந்தன. இது 2008 உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இந்திய ஐடி பங்குகளில் ஒரு மாதத்தில் ஏற்பட்ட மிக மோசமான சரிவாகும்.

இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம்… ஆந்த்ரோபிக் (Anthropic).

யார் இந்த ஆந்த்ரோபிக்?

இது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு ஏஐ நிறுவனம். ஓபன் ஏஐ நிறுவனத்திலிருந்து பிரிந்து வந்த டாரியோ அமோடி மற்றும் அவரது சகோதரி டேனிலா அமோடி ஆகியோரால் 2021இல் தொடங்கப்பட்டது.

வெறும் 5 ஆண்டுகளில் 380 பில்லியன் டாலர் மதிப்பை இந்நிறுவனம் எட்டியுள்ளது. இது இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் மற்றும் டெக் மகேந்திரா ஆகியவற்றின் மொத்த கூட்டு மதிப்பை (240 பில்லியன் டாலர்) விட மிக அதிகம்.

ஆந்த்ரோபிக் அறிமுகப்படுத்தியுள்ள 'Claude Code' என்ற புதிய ஏஐ மென்பொருள்தான் ஐடி ஜாம்பவான்களின் நெருக்கடிக்குக் காரணமாக அமைந்துள்ளது. பல தசாப்தங்களாக ஐபிஎம் நிறுவனம் எதன் மூலம் லாபம் ஈட்டியதோ, அந்த அடித்தளத்தையே இந்த மென்பொருள் கேள்விக்குறியாக்கியுள்ளது.

கோபோல் (COBOL): உலகப் பரிவர்த்தனையின் முதுகெலும்பு

இன்று அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை, உலக அளவில் தினமும் புழங்கும் 80% பணப் பரிமாற்றங்களுக்குப் பின்னால் கோபோல் மென்பொருளே இயங்கிக்கொண்டிருக்கிறது.

வங்கி, காப்பீடு, அரசுத் துறை, விமானப் போக்குவரத்து என ஒரு நாட்டின் மிக முக்கியத் துறைகளின் முதுகெலும்பாக இது உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் 98% ஏடிஎம் பரிவர்த்தனைகள் இன்றும் கோபோல் அடிப்படையிலானவை.

1959இல் வணிக மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த மென்பொருள், 65 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

அமெரிக்காவின் ஐபிஎம் நிறுவனம் 'மெயின்பிரேம்' (Mainframe) எனப்படும் தனது பிரம்மாண்டக் கணினி கட்டமைப்பு வழியாகவே கோபோல் மென்பொருளை உலக அளவில் இயக்கிவருகிறது.

ஐபிஎம் நிறுவனத்தின் வருவாயில் கோபோல் முக்கிய பங்கு வகிக்கிறது; உலகின் 90% கோபோல் புரோகிராம்கள் இன்றும் ஐபிஎம் மெயின்பிரேம்களில்தான் இயங்குகின்றன.

ஐடி நிறுவனங்களின் 'தங்கச் சுரங்கம்'

கோபோல் மென்பொருள் ஐபிஎம் நிறுவனத்துக்கு மட்டுமல்ல, இந்திய ஐடி நிறுவனங்களுக்கும் ஒரு 'தங்கச் சுரங்கம்'.

டிசிஎஸ், இன்போசிஸ் உள்ளிட்ட இந்திய ஐடி நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் கோபோல் மென்பொருளைப் பராமரிக்கும் மற்றும் நவீனப்படுத்தும் சேவைகளைத் தங்களது முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளன

கோபோல் மென்பொருளைப் பராமரிப்பதும், அதை நவீனப்படுத்துவதும் அத்தனை எளிதான காரியம் அல்ல. பல கோடி வரிகள் கொண்ட இந்த மென்பொருள் நிரல்களை மாற்றுவது மிகவும் கடினமானது மற்றும் அதிக செலவு பிடிக்கக்கூடியது. இதற்கு பெரும் மனித வளமும், பல ஆண்டுகால உழைப்பும் தேவைப்படுகிறது.

இதனால்தான் வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனங்கள் தங்களது பரிவர்த்தனைக் கட்டமைப்புகளைப் பராமரிக்க ஐபிஎம் மற்றும் இந்திய ஐடி நிறுவனங்களை பெருமளவில் நம்பியுள்ளன.

முன்னணி ஐடி நிறுவனங்களின் மொத்த வருவாயில் 22% முதல் 45% வரை இத்தகைய பராமரிப்புப் பணிகள் மூலமே கிடைக்கிறது. உதாரணமாக, டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 39%, இன்போசிஸ் வருவாயில் 28% வங்கி மற்றும் நிதித் துறையில் இருந்தே கிடைக்கிறது.

ஆந்த்ரோபிக் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்

இந்தச் சூழலில்தான் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் வருகை ஒட்டுமொத்த ஐடி துறைக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பல ஆயிரம் ஊழியர்கள் இணைந்து பல ஆண்டுகள் செய்யும் கோபோல் புதுப்பிப்பு வேலையை, தங்களது 'Claude Code' மென்பொருள் சில வாரங்களிலேயே செய்து முடிக்கும் வல்லமை கொண்டது என ஆந்த்ரோபிக் நிறுவனம் தெரிவித்துள்ளது,

அதுமட்டுமின்றி, இன்னும் ஒரு வருடத்துக்குள், மனிதர்கள் பல மாதங்கள் செய்யும் ஆராய்ச்சிப் பணிகளை ஏஐ சில நாட்களில் செய்து முடிக்கும் நிலையை எட்டும். இது உயர்மட்ட வேலைவாய்ப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆந்த்ரோபிக் குறிப்பிட்டுள்ளது.

இந்திய ஐடி துறையில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றிவரும் சூழலில், இந்த அதிநவீன ஏஐ வருகை ஒரு புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இவ்வளவு காலம் ‘ஆட்களின் எண்ணிக்கையை’ வைத்து வருமானம் ஈட்டிய நிறுவனங்களுக்கு, ‘தொழில்நுட்ப வேகத்தை’ மூலதனமாகக் கொண்ட ஏஐ நிறுவனங்கள் பெரும் சவாலாக மாறியுள்ளன.

25 ஆண்டுகளுக்கு முன் நவீனமாகப் பார்க்கப்பட்ட வணிக மாதிரிகள் இன்று காலாவதியாகின்றன. இந்த ஏஐ சுனாமியில் தாக்குப்பிடித்து நிற்க நிறுவனங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு தனிநபரும் காலத்திற்கேற்ப தங்களைப் புதுப்பித்துக்கொள்வது அவசியம்.


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it