Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
7 நிமிட வாசிப்பு

அரசியல் கைப்பாவைகளா விசாரணை அமைப்புகள்?

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவாலும் மணீஷ் சிசோடியாவும் விடுவிக்கப்பட்டிருப்பது மத்திய விசாரணை அமைப்புகள் குறித்த விமர்சனங்களுக்கு வலு சேர்த்துள்ளது.

அரசியல் கைப்பாவைகளா விசாரணை அமைப்புகள்?
X

இந்திய ஜனநாயகத்தின் ஆன்மா தனிநபர் சுதந்திரமும் பேணப்படுவதிலும், பாரபட்சமற்ற சட்டத்தின் ஆட்சி உறுதிசெய்யப்படுவதிலுமே நிலைகொண்டுள்ளது. ஆனால், நம்முடைய மத்திய புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடுகள், அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைச் சவாலுக்கு உட்படுத்துவதாக அமைந்துள்ளன. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2026 பிப்ரவரி 27 அன்று வழங்கிய தீர்ப்பு, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கிடைத்த சட்டரீதியான விடுதலை மட்டும் அல்ல; விசாரணையே தண்டனையாக மாறிவரும் சூழலில், "குற்றம் நிரூபிக்கப்படாதவரை அனைவரும் நிரபராதியே" என்ற இந்திய நீதிபரிபாலனத்தின் ஆதாரக் கொள்கையைப் பாதுகாப்பதற்கான அழுத்தமான குரலும்கூட.

கேஜ்ரிவாலின் கண்ணீர்

2020இல் டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதில் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத் துறையும், மத்திய புலனாய்வு அமைப்பும் (சிபிஐ) விசாரணையைத் தொடங்கின. இந்த வழக்கில் டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 2023 தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து அன்றைய முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் 2024இல் மக்களவைத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பாகக் கைதுசெய்யப்பட்டார். இருவர் மீதான குற்றமும் நிரூபிக்கப்படாத நிலையில், சிசோடியா 17 மாதங்களும் கேஜ்ரிவால் கிட்டத்தட்ட 6 மாதங்களும் விசாரணைக் கைதிகளாகவே சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர்.

குறிப்பாக, தசைநார் சிதைவு நோயால் (Multiple Sclerosis) கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் தனது மனைவியைக் கவனித்துக்கொள்ள சிசோடியா பிணை கோரியபோதும் அது மறுக்கப்பட்டது. கேஜ்ரிவால் சிறையிலிருந்தபடியே தனது முதல்வர் பணிகளைத் தொடர்ந்தார்.

டெல்லி அரசியலில் தாக்கம்

2024 மக்களவைத் தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளிலும் பாஜக வென்றது. ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி ஒன்றைக்கூட வெல்ல முடியவில்லை. டெல்லியில் தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி, 2025 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. மக்களவைத் தேர்தலுக்காகக் கேஜ்ரிவால் பரோலில் வந்து பரப்புரை செய்ய வேண்டியிருந்தது.

இவ்விரு தேர்தல்களில் ஆம் ஆத்மியின் படுதோல்விக்கு இந்த ஊழல் வழக்கு மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. என்றாலும் அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஏனென்றால் இப்போது நீதிமன்றத்தால் ‘ஆதாரமற்ற வழக்கு’ என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள டெல்லி மதுபானக் கொள்கை வழக்கின் காரணமாகக் கேஜ்ரிவால், சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மீது 'பெரும் ஊழல்' முத்திரை சுமத்தப்பட்டது. அது டெல்லி வாக்காளர்களிடையே ஏற்படுத்தியிருக்கக்கூடிய எதிர்மறை பிம்பம், தேர்தல் முடிவுகளில் கணிசமான தாக்கம் செலுத்தியது.

ஊழல் ஒழிப்பா பழிவாங்கலா?

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, இந்த வழக்கை ‘திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட வழக்கு’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார். உரிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரையும் விடுவித்துள்ளார். மேலும், புலனாய்வு அமைப்புகள் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் நடந்தவை பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்தான். இதேபோல் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் 2024இல் கைது செய்யப்பட்டார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சிறை சென்ற சோரன், சில மாதங்களில் பிணையில் வெளியேறினார். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அன்றைய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதாவும் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளியேறினார்; இப்போது டெல்லி சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அவரும் விடுவிக்கப்பட்டுள்ளார். திமுகவின் செந்தில் பாலாஜி அரசு வேலைவாய்ப்பு மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டு பிணையில் வெளியேறியுள்ளார். கர்நாடக துணை முதல்வராக இருக்கும் டி.கே.சிவக்குமார் 2019ஆம் ஆண்டில் பண மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டார். 2024இல் உச்ச நீதிமன்றம் அவரை அந்த வழக்கிலிருந்து விடுவித்தது.

மத்திய பாஜக, ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளைத் தொடர்ந்து குறிவைத்து வருகிறது என்ற விமர்சனம் எப்போதுமே இருக்கிறது என்றாலும் இப்போது உச்சத்துக்குச் சென்றுள்ளது. முறையான ஆதாரங்கள் இன்றி கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது; இறுதியில் நீதிமன்றத்தில் அந்த வழக்குகள் தோல்வியடையும்போது, அது அரசின் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்கிறது.

பண மோசடி சட்டத்திருத்தம்

இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீண்ட காலம் விசாரணைக் கைதிகளாகவே சிறையில் அடைக்கப்படுவதற்கு,'பண மோசடி தடுப்புச் சட்டத்தில் (Prevention of Money Laundering Act - PMLA) மேற்கொள்ளப்பட்ட திருத்தம் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. இந்தத் திருத்தத்துக்குப் பிறகு, பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுகிறவர்களுக்குப் பிணை கிடைப்பது மிகவும் கடினமானது. இது விசாரணை அமைப்புகளுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கியது. இதன் மூலம், போதிய ஆதாரங்கள் இல்லாத ஊழல் வழக்குகளில் கைதுசெய்யப்படுபவர்கள் நீண்ட காலம் விசாரணைக் கைதிகளாகச் சிறையில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

பண மோசடிச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான திருத்தங்களை உச்ச நீதிமன்றம் 2022ஆம் ஆண்டு உறுதி செய்தது. அந்தத் தீர்ப்பில், முறைகேடுகள் மூலம் சம்பாதித்த பணத்தை நேர்வழியில் பெறப்பட்டதாகக் கணக்கு காண்பிக்கும் பண மோசடிகள், ஒரு நாட்டின் நிதி அமைப்புகளை மட்டுமல்லாமல் அதன் இறையாண்மையையும் பாதிப்பதாக நீதிபதிகள் கூறியிருந்தனர்.

சமநிலை தேவை

மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட 23 பேரை விடுவித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில், சிபிஐ விசாரணை அமைப்பு மற்றும் அதிகாரிகள் குறித்து தெரிவிக்கப்பட்ட எதிர்மறையான கருத்துகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் மார்ச் 9 அன்று இடைக்காலத் தடை விதித்தது. மேலும், சிபிஐயின் மேல்முறையீட்டு மனு மீது முடிவெடுக்கப்படும்வரை வரை, இது தொடர்பான அமலாக்கத் துறையின் பணமோசடி வழக்கின் விசாரணையை நிறுத்திவைக்கவும் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டடோருக்கு எதிராக விரிவான சாட்சியங்கள் இருப்பதாகவும் இது தொடர்பான சதித் திட்டங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் சிபிஐ தனது மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளது.

ஆதாரம் இல்லாமல் இருப்பது மட்டுமே குற்றச்சாட்டுகள் பொய்யாக்கிவிடுவதில்லை. ஒருவர் பிணையில் வெளியேறிவிட்டதாலேயே அவர் நிரபராதி என்று உறுதியாகிவிடாது. ஆனால், ஆதாரங்களைத் திரட்டி குற்றத்தை நிரூபிக்க வேண்டிய முதன்மைப் பொறுப்பு விசாரணை அமைப்புகளுக்கு உள்ளது. ஆனால் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கைதுசெய்யப்படும் வழக்குகளில் ஆதாரங்களைத் திரட்டுவதைவிட குற்றம்சாட்டப்பட்டவருக்கும் பிணை கிடைப்பதைத் தடுப்பதிலேயே விசாரணை அமைப்புகள் அதிக கவனம் செலுத்துகின்றன என்ற விமர்சனமும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. அதேசமயம், ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பிற கட்சிகளிலிருந்து பாஜகவுக்கோ பாஜக கூட்டணிக்கோ வரும்போது அவர்கள் மீதான வழக்குகள் நீர்த்துப்போகச் செய்யவோ அல்லது வாபஸ்வாங்கவோ படும்போது அமலாக்கத் துறை, போன்ற புலனாய்வு அமைப்புகளின் மீதான விமர்சனங்கள் வலுப்பெறுகின்றன.

அரசு இயந்திரமும் நீதித் துறையும் ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முயல்வது சரிதான். ஆனால், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தனிநபர் சுதந்திரத்தைப் பறிப்பதாகவோ அல்லது அரசியல்ரீதியான பழிவாங்கல் என்று கருத இடமளிப்பதாகவோ அமைந்துவிடக் கூடாது. ஊழலை ஒழிப்பதற்கும் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இடையில் சமநிலையைப் பேணுவது, அரசு மற்றும் நீதித் துறையின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் மதிப்பையும் அதிகரிக்கும்.


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it