Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
4 நிமிட வாசிப்பு

முற்பட்ட சாதியினர் ஆதரவு: பாஜகவுக்கு ஏன் அச்சாணி?

இந்தியா முழுவதும் முற்பட்ட சாதியினரின் ஒருமித்த ஆதரவு பாஜகவின் வெற்றிக்கு முதன்மையான பங்களிக்கும் சக்தியாக உள்ளது

முற்பட்ட சாதியினர் ஆதரவு: பாஜகவுக்கு ஏன் அச்சாணி?
X

பாஜக எப்போதுமே முற்பட்ட சாதிகளின் ஆதரவு பெற்ற கட்சி எனினும், நரேந்திர மோடி பிரதமரான பிறகு, இந்தியாவில் உள்ள முற்பட்ட சாதி வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பாஜகவுக்கே வாக்களிக்கின்றனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அறிவித்த உயர் கல்வி நிலையங்களுக்கான சமத்துவ விதிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. நீதிமன்றம் இந்தத் தடையை விதித்திருக்காவிட்டால், அது பாஜகவுக்குப் பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கியிருக்கும். ஏனென்றால், அந்த விதிமுறைகளை எதிர்த்தவர்கள் பிராமணர்களும் பிற முற்பட்ட சாதியினரும்தான்.

பாஜக ஆதரவுத் தளத்தின் அச்சாணியாக இருப்பவர்கள் முற்பட்ட சாதியினர். அவர்களின் அதிருப்தி பாஜகவுக்கு ஏன் அரசியல் நெருக்கடியாகிறது? முற்பட்ட சாதியினரின் ஆதரவு பாஜகவுக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை 'தி இந்து' ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள லோக்நீதி-சி.எஸ்.டி.எஸ் (Lokniti-CSDS) தேசியத் தேர்தல் ஆய்வுத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறத் தவறினாலும், இந்தியாவில் உள்ள முற்பட்ட சாதி வாக்காளர்களில் 53% பேர் பாஜகவுக்கும், 60% பேர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் வாக்களித்துள்ளனர். அதேசமயம், 20% முற்பட்ட வகுப்பினர் மட்டுமே காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.

மோடி ஆட்சியில் நிகழ்ந்த ஒருங்கிணைப்பு

பாஜகவுக்கு எப்போதுமே முற்பட்ட சாதியினரின் ஆதரவு குறிப்பிடத்தக்க அளவில் இருந்துவந்துள்ளது. இருப்பினும், நரேந்திர மோடி முதல்முறையாகப் பிரதமரான 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பின் அது பல மடங்கு அதிகரித்துள்ளது. 1996 முதல் 2014 வரையிலான காலத்தில், பாஜகவுக்கு முற்பட்ட சாதியினர் அதிகமாக வாக்களித்தாலும், அது பெரும்பான்மையைப் பெறும் அளவுக்கு வலுவான ஆதரவுத் தளமாக உருப்பெறவில்லை. 2009 மக்களவைத் தேர்தலில் இந்த ஆதரவு சற்றுக் குறையவும் செய்தது. ஆனால், 2014க்குப் பிறகு நிலையாக 50 சதவீதத்துக்கும் அதிகமான முற்பட்ட சாதி வாக்குகள் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாகப் பதிவாகிவருகின்றன.

மூன்று தேர்தல்கள் உறுதிப்படுத்தும் உண்மை

மாநிலவாரியாகப் பார்த்தால் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், டெல்லி போன்ற பகுதிகளில், கடந்த மூன்று மக்களவைத் தேர்தல்களாக பாஜக 60 சதவீதத்துக்கும் அதிகமான முற்பட்ட சாதி வாக்குகளைத் தக்கவைத்துள்ளது. சத்தீஸ்கரில் 2014இல் 46% ஆக இருந்த ஆதரவு, 2019இல் 72% ஆகவும், 2024இல் 74% ஆகவும் அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்திலும் ஒடிஷாவிலும் 2014இல் 25 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த ஆதரவு, 2019 மற்றும் 2024 தேர்தல்களில் முறையே 57% மற்றும் 49% எனப் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, கர்நாடகாவில் கடந்த மூன்று தேர்தல்களிலும் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட முற்பட்ட சாதி வாக்குகள் பாஜகவுக்குச் சென்றுள்ளன. தெலங்கானாவில் 2014இல் வெறும் 12% ஆக இருந்த இந்த ஆதரவு, 2019இல் 30% ஆகவும், 2024 மக்களவைத் தேர்தலில் 53% ஆகவும் உயர்ந்துள்ளது.

மாநிலத் தேர்தலிலும் சிதையாத ஆதரவு

தேசிய அளவிலான அலைகளைத் தாண்டி, மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களிலும் இந்த ஆதரவுத் தளம் சிதையவில்லை. உதாரணமாக, உத்தர பிரதேசத்தில் 2017இல் 71% ஆக இருந்த ஆதரவு, 2022இல் 78% ஆக அதிகரித்துள்ளது. பிஹாரில் 2020 சட்டமன்றத் தேர்தலில் 54% முற்பட்ட சாதியினர் பாஜகவுக்கு வாக்களித்த நிலையில், 2025 தேர்தலில் அது 67 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமல்லாது, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் போன்ற பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் முற்பட்ட சாதியினரின் பாஜக ஆதரவு வாக்கு விகிதம் முந்தைய தேர்தல்களை விடக் கணிசமாக அதிகரித்துள்ளது.

உள்ளூர் பிரச்சினைகள் மேலோங்கும் மாநிலத் தேர்தல்களிலும் இந்த நிலைத்தன்மை இருப்பது, முற்பட்ட சாதியினர் பாஜகவைத் தங்களின் முதன்மை அரசியல் தேர்வாகக் கருதுவதையே காட்டுகிறது. மக்கள்தொகையில் குறைவான விகிதத்தைக் கொண்டிருந்தாலும், இந்தியா முழுவதும் வாழும் முற்பட்ட சாதியினரின் ஒருமித்த ஆதரவு பாஜகவின் வெற்றிக்கு முதன்மையான பங்களிக்கும் சக்தியாக உள்ளது. இதனால்தான், பாஜகவின் கொள்கை உருவாக்கத்தில் இந்தச் சாதிகளின் முன்னுரிமைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it