Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
8 நிமிட வாசிப்பு

அடிபணிந்துவிட்டதா இந்தியா?

ஒரு சார்புக் கொள்கையால் தார்மிக அதிகாரத்தை இழந்துவிட்ட இந்தியா இனி ஈரான் மீதான போரை ஒரு பார்வையாளராகத்தான் இருந்து வேடிக்கை பார்க்க முடியும்.

அடிபணிந்துவிட்டதா இந்தியா?
X

இதோ இன்னொரு போர் வெடித்துவிட்டது; இதைத் தூண்டிவிட்டது இஸ்ரேல்தான். அமெரிக்கா அதனுடன் சேர்ந்து போரை நடத்துகிறது.

‘அமெரிக்காவுக்கு மிகவும் ஆபத்தாக விளங்கப்போகிற அணு ஆயுதத்தை ஈரான் தயாரித்துவிட்டது அல்லது தயாரித்து முடிக்கும் நிலையில் இருக்கிறது’ என்று இஸ்ரேல்தான் பற்றவைத்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதை முழுக்க முழுக்க நம்பியதாலேயே போர் மூண்டுவிட்டது. மிகவும் ரகசியமான தகவல்களைக்கூட பார்க்கும் உரிமை பெற்ற அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகளும் இஸ்ரேலின் இந்த உளவுச் செய்திக்கு ஆதாரமே இல்லை என்று மறுத்ததாக ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ என்ற பத்திரிகை தெரிவிக்கிறது. இருப்பினும் இஸ்ரேலுடன் சேர்ந்துகொண்டு முழு அளவிலான போரை ஈரானுக்கு எதிராகத் தொடங்கிவிட்டார் டிரம்ப்.

கடந்த காலப் பொய்யுரைகள்

‘பெரும் எண்ணிக்கையில் மக்களைக் கொல்லக்கூடிய பேரழிவு ஆயுதம்’ ஒன்றை ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் தயாரித்து ரகசியமாக கையிருப்பில் வைத்திருக்கிறார் என்ற தகவல் தனக்குக் கிடைத்திருப்பதாகக் கூறி, முன்னர் அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ், ஈராக்கின் மீது (2003) படை எடுத்ததைப் போலவே இந்த முறையும் ஆதாரமற்ற தகவலை அடிப்படையாக வைத்து போர் நிகழ்த்தப்படுகிறது. லிபியாவில் அதிபர் கடாஃபி பெரும் எண்ணிக்கையில் தனது நாட்டு மக்களையே கொல்ல திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதால், மனிதாபிமான அடிப்படையில் அந்த நெருக்கடியைத் தடுக்க தலையிட நேர்ந்ததாக அதிபர் ஒபாமா ஆட்சிக்காலத்தில் (2011) கூறப்பட்டது. ‘மன்றோ கோட்பாட்டை’ பரணிலிருந்து மீண்டும் தேடி எடுத்து, வெனிசுலா நாட்டின் அதிபரை மனைவியுடன் கைது செய்து அமெரிக்காவுக்கே கூட்டிவந்து சிறையில் அடைத்து (2026) ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார் டொனால்டு ட்ரம்ப்; அதே கோட்பாட்டை மேலும் விரிவுபடுத்தி, இப்போது ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடுத்திருக்கிறார்.

இத்தகைய ராணுவப் படையுடனான தலையீடுகள் அப்போதும் – இப்போதும் – எப்போதும், சட்ட விரோதமானவை. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் அமெரிக்க அதிபர்கள் இப்படி போர் தொடுக்கக் கூடாது. இத்தகைய தலையீடுகள் ஐநா சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச சட்டத்துக்கும் முற்றிலும் எதிரானது. சட்ட விரோதமான செயல் என்பதுடன், இறையாண்மையுள்ள எந்த ஒரு நாட்டின் ஆட்சியையும் இன்னொரு நாடு தலையிட்டு மாற்றுவது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட முடியாத செயலுமாகும். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தும் போரும் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட முடியாத படையெடுப்புதான். வெனிசுலா அதிபர் மதுரோவை கடத்திச் சென்று தன் நாட்டில் சிறை வைத்திருக்கும் அமெரிக்க அரசின் செயலும், ஈரான் உயர் தலைவர் அயதுல்லா காமேனியையும் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள உயர் நிர்வாகிகளையும் திடீர் தாக்குதலில் கொன்ற இஸ்ரேலின் செயலும் சட்ட விரோதமான படுகொலைகள்தான். காமேனியின் படுகொலை நடந்த ஆறு நாள்களுக்குப் பிறகுதான் இந்தியா இரங்கல் தெரிவித்தது.

‘2023 அக்டோபர் 7இல் ஹமாஸ் இயக்கம் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் உயிரிழந்த, கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்து’ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார் பிரதமர் மோடி. ‘இந்த தருணத்திலும் - இதற்கும் அப்பாலும், இஸ்ரேலுடன் இந்தியா முழுமையான நம்பிக்கையுடன் உடன் நிற்பதாகவும்’ அறிவித்தார். காஸா பகுதியில் பாலஸ்தீனர்களை அடியோடு அழிக்கும் வேலையில் ஈடுபடுவதைக் கண்டித்தோ அவ்வாறு உயிரிழந்தவர்களுக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் உணவு – மருந்துகள் கிடைக்காமல் தடுக்கும் இஸ்ரேலிய அரசின் செயல்களைக் கண்டித்தோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ஹமாஸின் திடீர் தாக்குதலில் 1,219 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு 70,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காஸா பகுதியில் ராணுவத் தாக்குதல்களாலும் வேறு செயல்களாலும் உயிரிழந்திருப்பது உண்மையாகும்.

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் மோடி பேசியது 2026 பிப்ரவரி 25. அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களுடைய தாக்குதல்களைக் கூட்டாகத் தொடங்கியது பிப்ரவரி 28. இதற்குப் பதிலடியாக ஈரானும் பதிலடி தாக்குதலில் இறங்கி சில அரபு நாடுகளிலேயே இருக்கும் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகளை செலுத்தியது. இந்தப் போர் மேலும் நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்கு நீடிக்கலாம் என்று அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார். இஸ்ரேலுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றத்திலேயே மோடி தெரிவித்த ஆதரவு, பிற அரபு நாடுகளுக்கும் இந்தப் போர் பரவிவிடாமல் தடுக்க முயற்சிகளை எடுக்க முடியாமல் இந்தியாவின் கையைக் கட்டிப்போட்டுவிட்டது. ஒரு சார்புக் கொள்கையால் தார்மிக அதிகாரத்தை இழந்துவிட்ட இந்தியா இனி இந்தப் போரை ஒரு ‘பார்வையாளராகத்தான்’ இருந்து வேடிக்கை பார்க்க முடியும்; இப்போது போர் நடக்கும் நாடுகளுக்கும் அப்பால், இலங்கைக்கு அருகில் சர்வதேச நீர்ப்பரப்பிலேயே நடந்தாலும் கூட தலையிட முடியாது.

ஆட்சி மாற்றம்

இந்த மோதல்களுக்கெல்லாம் மையமான காரணம் ‘ஆட்சி மாற்றம்’. ஒரு நாட்டை ஆளும் அரசு எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், வலுக்கட்டாயமாக அதை மாற்ற இன்னொரு நாடு முயற்சிகள் மேற்கொள்ளக் கூடாது. மோசமான நிர்வாகம் என்று பார்த்தால் இப்போது உலகில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஆட்சிகளை மாற்ற வேண்டிவரும். பல நாடுகளை இப்போது ஆளும் சர்வாதிகாரிகள், அமெரிக்காவுக்கு நட்பு நாடுகளாகவோ - சந்தை வாடிக்கையாளர்களாகவோ இருக்கின்றனர்.

இஸ்ரேலின் தூண்டுதலின் பேரில்தான் 2025 ஜூனிலும் நள்ளிரவு தாக்குதலை ஈரான் மீது அமெரிக்கா தொடுத்தது. அப்படி தொடங்கி 12 நாள்களுக்குப் பிறகு, ‘ஈரானின் அணு நிலையங்களில் செறிவூட்டும் பணிகளை மேற்கொள்ள முடியாமல் உற்பத்தி நிலையங்களை முழுதாக நாசப்படுத்திவிட்டதாக’ அமெரிக்கா அறிவித்தது. அது உண்மையாக இருந்தால் அதற்குப் பிறகு ‘அமெரிக்காவுக்குப் பேரழிவை ஏற்படுத்திவிட’ இவ்வளவு குறுகிய காலத்தில் ஈரானால் எப்படி பெருமளவு அணு ஆயுதங்களைத் தயாரித்து ரகசியமாகக் குவித்து வைத்துவிட முடியும்? அல்லது யுரேனியத்துக்குத்தான் செறிவூட்டிவிட முடியும்? அப்போது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் மத்தியஸ்தராகச் செயல்பட்ட ஓமன், ‘செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைவசம் வைத்துக்கொள்வதில்லை, அணுகுண்டுகளைத் தயாரிக்கவும் போவதில்லை’ என்று ஈரான் உறுதியளித்திருப்பதாகத் தெரிவித்தது. இந்த நிலையில்தான் ‘ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம்?’ என்ற பொருள் பொதிந்த கேள்வியைக் கேட்டிருக்கிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லவரோவ். கடந்த காலத்தில் நிகழ்த்திய போர்களைப் போலவே இப்போது ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடுத்துள்ள போரும் உண்மையல்லாத தகவல்களையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

ஈரானுக்கு இஸ்ரேல் பரம வைரி அல்லது இஸ்ரேலுக்குப் பரம வைரி ஈரான். ஈராக், லிபியா ஆகிய நாடுகளிடமிருந்து இஸ்ரேலுக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாத வண்ணம் கடந்த காலங்களில் அவற்றைக் கடுமையாகத் தாக்கி ஒடுக்கிவிட்டது அமெரிக்கா. இஸ்ரேல் இப்போது – தற்காலிகமாகவேனும் – சவுதி அரேபியாவுடன் சமாதானம் செய்துகொண்டிருக்கிறது. மேற்காசியாவில் தனியொரு நாடாக ஆதிக்கம் செய்ய முடியாமல் பெரிய போட்டியாளராக இஸ்ரேலுக்கு இருப்பது ஈரான் மட்டுமே. ‘இந்த ஈரானை கொஞ்சம் கவனித்து, உங்களுக்கு அடிபணிந்து நடக்குமாறு செய்துவிடுங்கள்’ என்று அமெரிக்காவிடம் இஸ்ரேல் தொடர்ந்து வற்புறுத்தியதன் விளைவுதான் இந்தத் தாக்குதல். இது மிகவும் அருவருக்கத்தக்க வெளியுறவுக் கொள்கை. ஒரு நாட்டை ஆளும் அரசு எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அதை மாற்றும் உரிமை அந்த நாட்டு மக்களிடம்தான் இருக்க வேண்டும்.

இந்தப் போரில் பெரிதாக சாதித்துவிட்டதைப்போல அமெரிக்காவும் இஸ்ரேலும் மிகைப்படுத்திப் பேசுகின்றன. இஸ்ரேலியப் பத்திரிகையாளர் ஆலன் மிஸ்ராஹி இந்தப் போரை இன்னொரு கோணத்தில் பார்க்கிறார். ‘இந்தப் போரில் வீரர்கள் அதிகம் நேருக்கு நேர் மோதிக்கொள்ளவில்லை. இயந்திரங்கள்தான் இயந்திரங்களுடன் மோதுகின்றன. ஆளைக் கொல்வதில் அதிக ஆற்றல் உள்ளதும், தொடர்ந்து பெரும் எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் நிலையில் உள்ளதுமான ஆயுதம் மட்டுமே இறுதியில் வெற்றி பெறும்’ என்கிறார்.

தலைகுனிந்து நிற்கிறது இந்தியா

பெருந்தாக்குதலும் பேரழிவுமாக மாறிவிட்ட இந்தப் பிரதேசத்தில்தான் - மனிதவளம், பொருளாதார நலன், அரசியல் ஆதரவு – ஆகிய துறைகளில் இந்தியாவுக்கு உதவிகள் கிடைத்துவந்தன, இந்தியா இப்போது இங்கே தனித் தீவாகிவிட்டது. ஜோர்டான், குவைத், பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் தொடுக்கிறது. இந்தப் பகுதியில் கல்வி, வேலைவாய்ப்பு என்று சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வாழ்கின்றனர். இந்தியாவுக்கு தேவைப்படும் கச்சா பெட்ரோலிய எண்ணெய்யைத் தருவதுடன் அதன் ஏற்றுமதிகளுக்குச் சந்தையாகவும் வேலை – தொழில் வாய்ப்புகளைத் தருவதாகவும் இந் நாடுகள் விளங்குகின்றன. ஈரானின் சபாஹர் துறைமுகத்தில் 370 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இவ்வளவு நலன் சார்ந்த வாய்ப்புகள் இருந்தும் இந்தப் பகுதியில் செல்வாக்கையும் குரலையும் இழந்து நிற்கிறது இந்தியா; ‘கொள்கையற்ற வெளியுறவுக் கொள்கையின்படி’- இஸ்ரேலின் நோக்கங்களுக்கு ஒத்துழைக்க ஒத்து ஊதியதால்!


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it