Top
Begin typing your search above and press return to search.
தொடர்
7 நிமிட வாசிப்பு

இந்திய – அமெரிக்க ஒப்பந்தம்: யார் நலனுக்கானது?

கூட்டறிக்கையை மேலோட்டமாகப் படித்தாலே, இது பரஸ்பர நலனை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பது தெளிவாகிவிடும்.

இந்திய – அமெரிக்க ஒப்பந்தம்: யார் நலனுக்கானது?
X

அது காற்றாடி.., இல்லை அது பறவை.., இல்லை இல்லை அது ஆகாய விமானம்! “அடடா, என்னதான் அது?” – இந்த உரையாடல் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உடன்பாடு குறித்து பிப்ரவரி 6, 2026இல் இரு நாடுகளாலும் வெளியிடப்பட்ட கூட்டறிக்கைக்கு மிகவும் பொருந்தும். இந்தக் கூட்டறிக்கைக்குப் பிறகு, முடிவில்லாமல் பல ஊகங்கள் கிளம்பிவிட்டன, ’இது தொடர்பாக; விவரங்கள் எதையும் தரமாட்டோம்’ என்ற இந்திய அரசின் பிடிவாதமான போக்கு, சந்தேகங்களைப் போக்க உதவவில்லை. இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முக்கியப் பங்கு வகிப்பதால், கூட்டறிக்கை குறித்து கவலைப்பட அமெரிக்காவுக்கு ஏதுமில்லை, ஆனால் இந்தியாவுக்கு நிறைய இருக்கிறது.

இந்த கூட்டறிக்கையே சூழ்ச்சிகரமானது. ‘இருதரப்பு வணிக ஒப்பந்தங்கள் தொடர்பாகத்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்’ என்று இந்தியத் தரப்பில் பேசியவர்கள் 2025ஆம் ஆண்டில் பல முறை கூறிவந்தனர். ‘வெகு விரைவிலேயே இருதரப்பு ஒப்பந்தம் இறுதியாகிவிடும்’ என்று வணிகத் துறை அமைச்சர் பல முறை கூறினார், ‘இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிந்துவிடும்’என்றுகூட ஒருமுறை அறிவித்தார். இப்போது வெளியாகியிருக்கும் கூட்டறிக்கையைக் கவனமாக ஆராய்ந்தால், இது இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமே இல்லை என்று தெரிகிறது; இது இடைக்கால வர்த்தக ஒப்பந்தமும் கிடையாது; இது இடைக்கால ஒப்பந்தத்துக்கான பூர்வாங்க சட்டகமாகத்தான் தெரிகிறது. எப்படியோ, மலையைக் கெல்லி - எலியைப் பிடித்திருக்கிறோம்!

பரஸ்பர நலனுக்கானதா?

கூட்டறிக்கையை வெளியிட்ட பிறகு, ‘இந்த ஒப்பந்தம் பரஸ்பர நலனுக்கானது’ என்று இரு தரப்பும் கூறின. இந்தக் கூற்று, இதை வாசிப்பவருடைய அறிவுக்கூர்மையை கேலி செய்வது போன்றது. கூட்டறிக்கையை முழுதாகவோ – தீவிரமாகவோ அல்லாமல் மேலோட்டமாகப் படித்தாலே, இது பரஸ்பர நலனை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பது தெளிவாகிவிடும். கூட்டறிக்கையை சற்றே கவனமாக ஆராய்வோம் (அதில் உள்ளதைத்தான் கீழே குறிப்பிட்டுள்ளேன்):

அமெரிக்காவிடமிருந்து வாங்கப்படும் அனைத்து தொழிற்சாலைப் பொருட்கள் மீதும், உணவு -வேளாண் பண்டங்கள் மீதும் காப்பு வரிகளை இந்தியா விலக்கிக்கொள்ளும் அல்லது சிலவற்றுக்கு வரி விகிதங்களைக் குறைத்துவிடும்; அமெரிக்காவோ, இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யும் பொருள்கள் மீதான பரஸ்பர காப்பு வரியை 18% என்ற அளவில் பராமரிக்கும் (2025 ஏப்ரல் 2இல் விதித்த 25% காப்பு வரி குறைக்கப்பட்டிருக்கிறது). இந்தியாவிடமிருந்து வாங்கும் ஜவுளித் துணிகள் – ஆயத்த ஆடைகள், தோல் – காலணிகள், பிளாஸ்டிக் – ரப்பர், கரிம வேதிப்பொருள்கள், வீடுகளை அலங்கரிக்கும் அறைகலன்கள், கைவினைப் பொருள்கள், சிலவகை இயந்திரங்கள் இதில் இடம்பெறும். இடைக்கால ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பிறகே, பொதுவான மருந்து-மாத்திரைகள், வைரம், நவரத்தினங்கள், விமானங்களுக்கான இயந்திர பாகங்கள் ஆகியவற்றின் மீது பதிலுக்கு பதிலாக விதித்த காப்பு வரியை அமெரிக்கா விலக்கிக்கொள்ளும். அமெரிக்கப் பொருள்களுக்கு வரியே கிடையாது என்று இந்தியா அனுமதிப்பதற்கும், இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா 18% வரி விதிப்பதற்கும் பெயர் ‘பரஸ்பர ஒப்பந்தமா’?

மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் நவீனக் கருவிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவும் வர்த்தகத் தடைகளை ஆராய்ந்து விலக்கவும், அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பொருள்களை இந்தியச் சந்தையில் விற்க முடியாமல் தாமதப்படுத்தும் இறக்குமதி உரிம நடைமுறைகளை அகற்றவும் ஒப்புக்கொண்டுள்ளது இந்தியா. உணவு, வேளாண் துறையில் அமெரிக்கப் பொருள்களை இந்தியச் சந்தையில் விற்க முடியாமல் தடுக்கும், காப்புவரியல்லாத – பிற வகை தடைகளை பரிசீலனை செய்யவும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு ஈடாக அமெரிக்கத் தரப்பிலிருந்து எந்தவித எதிர் கடப்பாடும் இல்லை. காப்பு வரியல்லாத விவகாரங்களில் இந்தியா அவற்றை அகற்றப் பரிசீலிக்க வேண்டும் என்பதும், அமெரிக்கா அப்படி எதையும் பரிசீலிக்கத் தேவையில்லை என்பதும் எப்படி பரஸ்பரம் நன்மை தரும் ஒப்பந்தமாக அமைய முடியும்?

மின்னுற்பத்தி சாதனங்கள், விமானங்கள் – விமானங்களில் பொருத்தப்படும் பல்வேறு சாதனங்கள், விலைமதிப்புள்ள உலோகங்கள், உயர் தொழில்நுட்பப் பொருள்கள், நிலக்கரி ஆகியவற்றை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 50,000 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு இந்தியா வாங்கிக்கொள்ள விரும்புகிறது. கணினி காட்சிப்படத் தயாரிப்பு இயந்திரங்கள் உள்பட நவீனத் தொழில்நுட்பமுள்ள பொருள்களையும் தரவு சேமிப்பு மையங்களில் பயன்படும் உயர் தொழில்நுட்ப தகவல் தொடர்பு சாதனங்களையும் அதிக அளவில் கொள்முதல் செய்ய இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த இனத்தில் நவீனப் பொருள்கள் அனைத்தும் அமெரிக்காவால் விற்கப்பட்டு இந்தியாவால் வாங்கிக்கொள்ளப்படுபவை மட்டுமே; இந்தியாவிடமிருந்து அமெரிக்கா வாங்கிக்கொள்ள ஏதுமில்லை. எங்கே இருக்கிறது பரஸ்பர வர்த்தக உறவு?

இந்தக் கூட்டறிக்கையுடன் வெளியான நிர்வாக உத்தரவில், இந்த உடன்பாடு ஏற்படுவதற்குச் சாதகமாக இந்தியா எடுத்துள்ள குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளாக சிலவற்றை ட்ரம்ப் சுட்டிக்காட்டுகிறார். ரஷ்யாவிடமிருந்து நேரடியாகவோ – மறைமுகமாகவோ கச்சா பெட்ரோலிய எண்ணெய்யை இனி வாங்குவதில்லை என்ற உறுதிமொழி, மின்சார தயாரிப்புக்கான சாதனங்கள் – எரிபொருள் ஆகியவற்றை அமெரிக்காவிடமிருந்து மட்டுமே வாங்குவது, ராணுவத்துக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், போர்க்கருவிகள் உள்ளிட்டவற்றுக்கான வர்த்தகத்தை அமெரிக்காவுடன் மேலும் விரிவுபடுத்துவது ஆகியவற்றை முக்கியமான நடவடிக்கைகள் என்கிறார் ட்ரம்ப். இதற்குப் பிறகே, இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது ஆகஸ்ட் 6, 2025இ ல் தண்டனையாக விதித்த கூடுதல் 25% காப்பு வரியை விலக்கத் தீர்மானித்திருக்கிறார் டிரம்ப்.

வெளிப்படையான எச்சரிக்கை

ரஷ்யக் கூட்டமைப்பிடமிருந்து நேரடியாகவோ – வேறு எந்த முகமை மூலமாகவோ கச்சா பெட்ரோலிய எண்ணெயை மீண்டும் வாங்கினால் இந்தியப் பொருள்கள் மீது வழக்கமான காப்பு வரியுடன் அபராதமாக மேலும் 25% காப்பு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. 2026 பிப்ரவரி 6இல் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் முழுவதுமே – ரஷ்ய கச்சா பெட்ரோலிய எண்ணெயைப் பற்றித்தான் இருந்திருக்கிறது. அமெரிக்காவின் மிரட்டலிலும் - இந்தியா அதற்கு அஞ்சி பணிந்ததிலும் எங்கே இருக்கிறது பரஸ்பர வணிகத்தன்மை?

இந்தியப் பண்டங்கள் மீது அமெரிக்காவின் காப்பு வரி, ‘மிகவும் வேண்டப்பட்ட நாடு’ என்ற முறையில் வெறும் 3% ஆக 2025 ஏப்ரல் 2க்கு முன்னால் வரை இருந்தது. இருதரப்பு வர்த்தகப் பற்றுவரவில், இந்தியாவுக்கு சாதகமாக வரவில் உபரியும் நிலவியது. நெருக்கடிகால அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியப் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை 25% ஆக உயர்த்தினார் ட்ரம்ப், அதுதான் இப்போது 18% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்தியா மீது மட்டுமல்ல வேறு பல நாடுகள் மீதும் ட்ரம்ப் விதித்த இந்த காப்பு வரி உயர்வு தொடர்பான வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இவ்வாறு உலக வர்த்தகத்தில் பிற நாடுகள் மீதான காப்பு வரியை, நெருக்கடி கால சட்டத்தின் கீழ் உயர்த்த சட்டத்தில் இடமில்லை என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி நேர்ந்தால்கூட இந்திய அரசு அதற்காக அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்குத்தான் நன்றி கூற வேண்டுமே தவிர அதிபர் ட்ரம்புக்கு அல்ல. அப்படியொரு நிலை வந்தால் - இரு நாடுகளும் வர்த்தக உறவில், டிரம்பின் தடைவிதிப்புகளுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பிவிடும். ஆனால் அதற்குள் அமெரிக்கா பல சலுகைகளை இந்தியாவிடமிருந்து கறந்துவிடும், பதிலுக்கு இந்தியாவுக்கு எந்தச் சலுகையும் காட்டாமல். பரஸ்பர நலன் சார்ந்த ஒப்பந்தம் இதுதானா?

மறைமுக சுமைகள்

இந்த ’பரஸ்பர நன்மை’யளிக்கும் ஒப்பந்தம் அமலானாலும் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு, அலுமினியம் மீதான காப்பு வரி 50% ஆகவும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் மீதான காப்பு வரி 25% ஆகவும் இருக்கும். அப்படியிருந்தும் அமெரிக்கத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருள்கள், பல வேளாண் உற்பத்திப் பொருள்கள், சிவப்பு சோளம், சோயாமொச்சை எண்ணெய், திராட்சை ரசம் (ஒயின்), சிலவகை சாராயத் தயாரிப்புகள், மோட்டார் வாகனங்கள், அதிக குதிரைத்திறன் உள்ள மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றுக்கு இந்தியா சலுகைகளை அளிக்கிறது என்கிறார் வர்த்தக நிபுணர் அஜய் ஸ்ரீவாஸ்தவா.

அடுத்த ஐந்தாண்டுகளில் 50,000 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு அமெரிக்காவிடமிருந்து இந்தியா எதைத்தான் வாங்கப் போகிறது என்பது பெரிய புதிராக இருக்கிறது. அப்படிச் செய்தால் அமெரிக்க வர்த்தகத்துடன் இந்தியாவுக்கு இருக்கும் ‘வர்த்தக உபரி’காணாமல் போய்விடும். இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிபெற அமெரிக்காவின் சில பொருள்கள்தான் பயன்படும். எனவே அமெரிக்காவிடமிருந்து விலை அதிகமுள்ள விமானங்கள், விமான சாதனங்கள், ராணுவ சாதனங்கள், கச்சா பெட்ரோலிய எண்ணெய் ஆகியவற்றைத்தான் வாங்கப்போகிறோம், அவற்றில் பலவற்றை என்ன செய்வது என்று கூடத் தெரியாமல் விழிக்கப் போகிறோம்!


(தமிழில்: சாரி)


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it