Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
3 நிமிட வாசிப்பு

ரூ.80,000க்குக் கீழ் சரியப்போகிறதா தங்கம்?

மீண்டும் டாலரில் வர்த்தகம் செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளதால், உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம் ஏற்பட வாய்ப்பு

ரூ.80,000க்குக் கீழ் சரியப்போகிறதா தங்கம்?
X

தங்கம் விலை கடந்த ஜனவரி 29 அன்று ஒரு சவரன் 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டது. ஆனால், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலிருந்து அதன் விலை 15% வரை சரிந்துள்ளது.

சர்வதேச அரசியல் பதற்றம் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் தங்கம் விலை மேலும் உயரும் என்றே பொருளாதார நிபுணர்கள் கணித்துவந்தனர். ஆனால், அதற்கு மாறாக அடுத்த ஓர் ஆண்டுக்குள் தங்கம் விலை மீண்டும் சவரன் 80 ஆயிரம் ரூபாய்க்குக் கீழ் சரிய வாய்ப்புள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ன காரணம்?

ரஷ்யாதான் காரணம்.

உக்ரைன் போர் சூழல் மாறிவரும் நிலையில், அமெரிக்காவுடன் மீண்டும் பொருளாதாரரீதியாக இணக்கத்தை ஏற்படுத்த ரஷ்யா திட்டமிட்டுவருவதாகக் கசிந்துள்ள தகவல்களே இந்த மாற்றத்துக்குக் காரணம்.

2022இல் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதால் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்தன. குறிப்பாக, சர்வதேசப் பணப் பரிமாற்ற அமைப்பிலிருந்து (SWIFT) ரஷ்ய வங்கிகள் நீக்கப்பட்டதால், டாலரைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்ய முடியாத நிலை ரஷ்யாவுக்கு உருவானது.

டாலர் தவிர்ப்பும் தங்கக் குவிப்பும்

இதன் விளைவாக, டாலருக்கு மாற்றாக இந்தியாவுடன் ரூபாய்-ரூபிள் முறையிலும், சீனாவுடன் யுவான் நாணயத்திலும் ரஷ்யா வர்த்தகத்தைத் தொடர்ந்தது. தற்போது சீனாவுடனான ரஷ்யாவின் வர்த்தகத்தில் 95% உள்ளூர் நாணயங்களிலேயே நடைபெறுகிறது.

டாலர் மீதான பிடியைக் குறைக்க, ரஷ்யா தனது அந்நியச் செலாவணி கையிருப்பில் டாலரைத் தவிர்த்துவிட்டு, பெருமளவில் தங்கத்தை வாங்கிச் சேர்த்தது. ரஷ்யாவைப் பின்பற்றி இந்தியா, சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் (BRICS) நாடுகளும் டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்க தங்கத்தைப் பெருமளவு வாங்கிக்குவித்தன.

தலைகீழாக மாறும் நிலை

ஆனால், ப்ளூம்பெர்க் வெளியிட்ட தகவலின்படி, தற்போது அமெரிக்காவுடன் உறவைச் சீராக்க ரஷ்யா மீண்டும் டாலர் வர்த்தகத்துக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளது. இது பிரிக்ஸ் நாடுகளின் டாலர் ஆதிக்கத்தைக் குறைக்கும் முயற்சிக்குப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வர்த்தகத்தை ரஷ்யா மீண்டும் டாலர் மூலம் நடத்தத் தொடங்கினால், உலகச் சந்தையில் டாலரின் மதிப்பு மீண்டும் வலுப்பெறும். பொதுவாக டாலர் வலுவடையும்போது, அதற்கு மாற்றாகக் கருதப்படும் தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் குறையும்.

மிக முக்கியமாக, ரஷ்யா தனது வசம் உள்ள பிரம்மாண்டமான தங்க இருப்பை விற்று, அதனை டாலராக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யாவைப் பின்பற்றி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் தாங்கள் சேமித்து வைத்த தங்கத்தைச் சந்தையில் விற்கத் தொடங்கினால், உலக அளவில் தங்கத்தின் வரத்து அதிகரித்து விலை சரசரவென வீழ்ச்சியடையும்.

இந்த நகர்வுகளின் காரணமாகவே, 2027ஆம் ஆண்டுக்குள் தங்கம் விலை சவரனுக்கு 80 ஆயிரம் ரூபாய்க்குக் கீழ் குறைய வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it