Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
8 நிமிட வாசிப்பு

நட்சத்திர - ரசிகக் கூட்டணி: அரசியலில் ஆபத்து

தொண்டர்களின் ரசிக மனநிலையும் தலைவரின் நட்சத்திர மனநிலையும் தவெகவின் அரசியலை ஆபத்தான போக்கில் வழிநடத்துகின்றன

நட்சத்திர - ரசிகக் கூட்டணி: அரசியலில் ஆபத்து
X

தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் உணர்ச்சிகரமானது. ஆனால், அந்த உணர்ச்சிகள் ஒரு சித்தாந்தத்தைச் சார்ந்தோ மக்கள் நலனைச் சார்ந்தோ இருந்த காலம் மறைந்து, இன்று 'தனிமனித ஆராதனை' என்னும் ஆபத்து தீவிரமடைந்திருக்கிறது.

அனைத்து மையநீரோட்ட அரசியல் கட்சிகளுமே இதற்குப் பங்களித்துள்ளன என்றாலும், விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிநபர் ஆராதனையைப் புதிய உயரங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளது. பொது இடங்களிலும் சமூக வலைதளங்களிலும் தவெக உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் நடந்துகொள்ளும் விதம், தமிழ்நாட்டு அரசியலின் தரத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கீழே தள்ளியிருக்கிறது.

ரசிகர் மன்றங்களின் நீட்சி

ஒரு அரசியல் கட்சியின் பலம் அதன் தொண்டர்களின் அறிவார்ந்த பொறுப்புமிக்க செயல்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால், தவெகவின் தொண்டர் படை என்பது பெரும்பாலும் சினிமா ரசிகர் மன்றங்களின் நீட்சியாகவே இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றுவிடும், விஜய் முதல்வர் ஆகிவிடுவார் என்று அதன் ஆதரவாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

நம்பிக்கை கொள்வதில் எந்தப் பிழையும் இல்லை. ஆனால், இந்த நம்பிக்கை நிஜமாவதற்கான நடைமுறை சாத்தியங்கள் குறித்துத் தர்க்கரீதியான கேள்வி எழுப்பும் அனைவரையும் வசைகள் மூலமாகவோ 'ஆளும் கட்சியின் அடிமை' என்று முத்திரை குத்துவதன் மூலமாகவோதான் இவர்கள் எதிர்கொள்கிறார்கள்.

கட்சியின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாடுகளுக்கு முரணான செயல்பாடுகள், பல முக்கியப் பிரச்சினைகளில் கட்சித் தலைவர் விஜய் அமைதி காப்பது, குறிப்பாக அரசியல் எதிரியான திமுகவால் ஆளப்படும் மாநில அரசை விமர்சிக்கும் அளவுக்குக் கொள்கை எதிரியான பாஜகவால் ஆளப்படும் மத்திய அரசை விமர்சிக்கத் தயங்குவது ஆகியவை குறித்துக் கேள்வி எழுப்புவோருக்கும் இதே 'பரிசுகள்'தான் கிடைக்கின்றன.

சமூக ஊடகங்களில் கும்பலாகச் சேர்ந்துகொண்டு வசைமழை பொழிவார்கள் என்பதால், இவர்களிடம் தர்க்கரீதியாகவும் அறிவுபூர்வமாகவும் பேசுவதற்கே மக்கள் தயங்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.

எதையும் நியாயப்படுத்தும் துணிச்சல்

விஜய்யின் அனைத்துச் செயல்பாடுகளையும் செயலற்ற தன்மையையும் பேச்சுகளையும் மெளனங்களையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதற்கும் நியாயப்படுத்துவதற்குமான கருத்துகளைக் கட்சியின் ஆதரவாளர்களும் நிர்வாகிகளும் பரப்புகிறார்கள். இதற்கு அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் பல நேரங்களில் அபத்தமானவையாகவும், சில நேரங்களில் ஆபத்தானவையாகவும் இருக்கின்றன.

தவெக சார்பில் முன்வைக்கப்படும் கருத்தை மறுக்கும் வகையில் பத்திரிகைச் செய்திகளையோ, செய்திக் காணொளிகளையோ ஆதாரமாகக் காட்டினால், அந்த இதழ் அல்லது செய்தித் தொலைக்காட்சியை ஏதேனும் ஒரு அரசியல் கட்சியுடன் தொடர்புபடுத்தி, ”அவர்கள் சொல்வதை நாங்கள் ஏன் நம்ப வேண்டு” என்கிறார்கள்.

கடைநிலைத் தொண்டர்கள், சமூக ஊடக ஆதரவுப் படையினர் மட்டுமல்லாது, தவெகவின் சார்பில் ஊடக விவாதங்களுக்கு அனுப்பப்படும் பேச்சாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடமும் இதே போக்கைக் காண முடிகிறது. "மத்திய பட்ஜெட் பற்றி ஏன் விஜய் கருத்துத் தெரிவிக்கவில்லை?" என்று கேட்டால், "பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது முதல்வரும் இல்லை, பிரதமரும் இல்லை எனும்போது எங்கள் கட்சித் தலைவர் ஏன் அது பற்றிக் கருத்துக் கூற வேண்டும்?" என்று தவெக பேச்சாளர் ஒருவர் கேட்கிறார். "எங்கள் தலைவர் எல்லாவற்றுக்கும் கருத்து கூறிக்கொண்டு அரசியல் லாபம் தேடிக்கொண்டிருக்க மாட்டார்" என்கிறார் இன்னொரு முக்கிய நிர்வாகி.

இது விஜய்யின் செயலின்மையை நியாயப்படுத்துவது மட்டுமல்ல, அரசியல் விவகாரங்களில் தினமும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கும் அரசியலர்களின் முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாட்டையே இழிவுபடுத்துவதாகும்.

"உங்கள் தலைவர் ஏன் களத்துக்கு வந்து மக்களைச் சந்திப்பதில்லை?" என்று கேட்டால், "தலைவர் வெளியே வந்தால் அசம்பாவிதங்கள் நிகழும்" என்கிறார்கள்.

காவல்துறை அனுமதி அல்லது பாதுகாப்பு வழங்க மறுக்கிறது என்றும் தவறாமல் குறிப்பிடுகிறார்கள். கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் ஏன் அவர்கள் வசிக்கும் இடத்துக்குச் சென்று சந்திக்கவில்லை என்று ஊடகர்கள் கேள்வி எழுப்பியபோது, “விஜய் கரூருக்குச் செல்வதற்குக் காவல்துறை அனுமதி மறுக்கிறது”என்று தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் கூறினார். அது உண்மை என்றால், அதை எதிர்த்து ஏன் தவெக எந்தப் போராட்டமும் நடத்தவில்லை அல்லது வழக்குத் தொடரவில்லை என்ற கேள்வி எழுகிறது.

விஜய் ஏன் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை என்ற கேள்விக்கு பல விதமான மழுப்பல் பதில்களை தவெக நிர்வாகிகள் அளித்துவருகின்றனர். தவெக தேர்தல் பரப்புரை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கண்டவர்களின் கேள்விக்கு எல்லாம் தங்கள் தலைவர் பதில் அளிக்க மாட்டார் என்று கட்சி மேடையில் பேசுகிறார். அதோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தயாராக இருந்தால் தங்கள் கட்சித் தலைவர் விஜய்யுடன் ஒரே மேடையில் அமர்ந்து விவாதம் நடத்தத் தயாரா என்று சவால் விடுகிறார்.

பொறுப்பின்மையே பொதுக் குணமாய்...

41 பேர் உயிரைப் பறித்த கரூர் துயரச் சம்பவத்துக்கு விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளின் எதிர்வினை குறித்துப் பல விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை ஏதுவும் தவெக தொண்டர்களையோ நிர்வாகிகளையோ துளியும் அசைத்திருப்பதாகத் தெரியவில்லை. இப்போதும்கூட, கரூர் துயரச் சம்பவம் நடந்திருக்காவிட்டால் விஜய் திட்டமிட்டிருந்தபடி அனைத்து மாவட்டங்களிலும் பரப்புரைக் கூட்டங்களை நடத்தியிருப்பார், அதன் மூலம் தவெக வெற்றி பெறுவது இன்னும் பல மடங்கு எளிதாகியிருக்கும் என்று சமூக ஊடகங்களில் தவெகவினர் பேசிக்கொள்கின்றனர். கட்சித் தலைவர் விஜய் தொடங்கி தவெக தரப்பைச் சேர்ந்த ஒருவர்கூடப் பொதுவெளியில் அந்தத் துயரத்துக்குப் பொறுப்பேற்கும் வகையிலோ, உயிரிழப்புகளுக்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கும் வகையிலோ பேசுவதைப் பார்க்க முடியவில்லை.

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அரசியல் கட்சிக் கூட்டங்களுக்குத் தமிழ்நாடு அரசு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அந்த விதிமுறைகள் தங்கள் கட்சியின் செயல்பாட்டை முடக்குவதற்கான முயற்சி என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவற்றுக்கிடையே, சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்றவர் மாரடைப்பால் உயிரிழந்ததற்கும் தவெகவினரின் எதிர்வினையில் அதே பொறுப்பின்மையே வெளிப்பட்டது.

முதலில் உயிரிழந்தவருக்கு இதய நோய் இருந்தது, அதனால்தான் உயிரிழந்தார் என்று கூறினார்கள். அது பொய் என்று உயிரிழந்தவரின் குடும்பத்தினர் நிரூபித்தனர். அதன் பிறகு, "அவர் எங்கள் கட்சி ஆள் இல்லை" என்றார்கள். "அவரிடம் நிகழ்வுக்கான அனுமதிச் சீட்டு (பாஸ்) இல்லை, காவல் துறைதான் அவரை உள்ளே அனுமதித்தது" என்று தவெகவின் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் கூறினார். பொதுவாக அரசியல் கட்சிகள், தங்கள் நிகழ்ச்சிகளில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு ஆளும் கட்சி மற்றும் காவல் துறையின் மீது பழி சுமத்துவார்கள். ஆனால், தங்களது கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று உயிரிழந்தவரை, "எங்களது ஆள் இல்லை" என்று மறுதலிப்பதற்குத் தவெகவைத் தவிர வேறெந்தக் கட்சியும் இதுவரை துணிந்ததில்லை.

நட்சத்திரமா? அரசியலரா?

தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் விஜய் ரசிகர்களாகவே இருப்பது பெரிய பிரச்சினைதான். ஆனால், தவெகவின் முதன்மையான பிரச்சினை இதுவல்ல. அக்கட்சியின் தலைவர் விஜய் தன்னை இன்னும் ஒரு திரை நட்சத்திரமாகவும், தான் அரசியல் கட்சி தொடங்கிவிட்டதன் மூலமாகவே ‘தீய சக்தி’களிடமிருந்து மக்களைக் காக்கும் மீட்பராகவும் (Messiah) கருதிக்கொள்கிறார். இதுதான் ரசிக மனநிலையைவிடப் பெரிய பிரச்சினை. விஜய் தன்னை ஒரு அரசியலராக (Politician) கருதிக்கொள்கிறார் என்று நம்புவதற்கான எந்தத் தடயமும் இதுவரை வெளிப்படவில்லை.

வேறு எந்த அரசியல் கட்சித் தலைவருக்கும் கூடாத பெருங்கூட்டம் விஜய்க்குத் கூடுவதற்கு முதன்மையான காரணம், திரையில் பார்த்த அவரை நேரில் காண வேண்டும் என்ற சினிமா ரசிகர்களின் ஏக்கம்தான். விஜய் கூட்டங்களில் அசம்பாவிதங்கள் நடப்பதற்கும், அவரது ஆதரவாளர்கள் கூறுவதுபோல் விஜய் பொது இடங்களுக்கு வருவதே ஆபத்தானது என்ற நிலை இருப்பதற்கும் இந்த ஏக்கம்தான் முதன்மையான காரணம். இது விஜய்க்குத் தெரியும். விஜய் ஒரு பொறுப்புமிக்க தலைவர் என்றால், "விஜய்யைக் காண்பதே அரிதானது" என்ற நிலையை மாற்ற வேண்டும்; அடிக்கடி மக்களைச் சந்திக்க வேண்டும். விஜய் தனது முன்னுதாரணமாகக் கருதும் எம்ஜிஆரோ, விஜயகாந்தோ ஏன்... அரசியலில் தோல்வி அடைந்தவராக மோசமாகக் கிண்டலடிக்கப்படும் கமல்ஹாசன்கூட மக்களைச் சந்திக்கத் தயங்கியதே இல்லை. மக்களைச் சந்திப்பது அரசியலர்களின் முதன்மையான அடிப்படைத் தேவை. மக்களை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும்கூட அவர்களிடம் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பில் இருக்க வேண்டும்.

அதேபோல், மக்கள் பிரச்சினைகள் குறித்துத் தான் பேசத் தேவையில்லை என்று கருதுவதும், திமுகவை விமர்சிப்பதற்கான வாய்ப்பு இருக்கும் பிரச்சினைகளில் மட்டும் அறிக்கை வெளியிட்டுவிட்டு, கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் அமைதியாக இருப்பதும் ஓர் அரசியலருக்கு அழகல்ல. மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட அரசியல் தலைவர், மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் அனைத்துக்கும் குரல் எழுப்ப வேண்டும்; தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்; அது குறித்த கேள்விகளுக்குப் பதில் சொல்லப் பழக வேண்டும்.

அடுத்ததாக, தனது ரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களின் பிழைகளை விஜய் ஒருமுறை கூடக் கண்டிக்கவில்லை. கூட்டங்களில் பேசும்போதெல்லாம் தனது அரசியல் எதிரிகளை ஏளனம் செய்யும் விதமாக மட்டுமே பேசுகிறார். இதன் மூலம், பிறரை ஏளனம் செய்வதற்கும் இழிவுபடுத்துவதற்கும் அவரது தொண்டர்கள் மேலும் ஊக்கம் அடைகிறார்கள். இந்தத் தன்மையோடு, பேசும் உள்ளடக்கங்களிலும் இந்தப் பண்பு மாற்றம் வெளிப்பட வேண்டும்.

இவையெல்லாம் நிகழ வேண்டும் என்றால், தவெக தலைவர் விஜய், நட்சத்திரம் என்ற பிம்பத்திலிருந்து விடுபட்டு ஓர் உண்மையான 'அரசியலர்’ என்ற நிலைக்கு மாற வேண்டும்.


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it