Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
8 நிமிட வாசிப்பு

ட்ரம்ப்பின் வர்த்தகப் போர்

தன்னுடைய உத்தரவுகள் செல்லாது என தீர்ப்பளித்த நீதிபதிகளை வசைபாடிய ட்ரம்ப், வெவ்வேறு சட்டங்களைப் பயன்படுத்தி வெவ்வேறு வரிகளை உடனடியாக விதித்துவிட்டார்

ட்ரம்ப்பின் வர்த்தகப் போர்
X

பல நாடுகளின் இறக்குமதிகளுக்கு ‘சர்வதேச நெருக்கடிகால பொருளாதார அதிகாரச் சட்டப்படி’ 2025 ஏப்ரல் 2இல் தான் விதித்த ‘காப்பு வரி’ செல்லாது என்று தீர்ப்பளித்த அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுங்கோபத்தில் இருக்கிறார்; தன்னுடைய செயல் அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின்படி செல்லாது என்று தீர்ப்பளித்த நீதிபதிகளை வசைச் சொற்களால் திட்டித்தீர்த்தார் (இந்தியாவாக இருந்திருந்தால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் பாய்ந்திருக்கும்), அமெரிக்க அரசமைப்புச் சட்ட முதலாவது திருத்தத்துக்குக் கட்டுப்பட்டதுதான் அந்த நாடு, அத்துடன் அந்நாட்டு நீதிபதிகளை யாராலும், எதைக் கொண்டும் பணியவைத்துவிட முடியாது.

தன்னுடைய உத்தரவுகள் செல்லாது என்று தீர்ப்பளித்த நீதிபதிகளை வசைபாடியதுடன் ட்ரம்ப் நின்றுவிடவில்லை, கிட்டத்தட்ட அதே அளவுக்கு வரிச் சுமை தொடர்கிற வகையில், நடப்பில் பயன்பாட்டில் உள்ள வெவ்வேறு சட்டங்களைப் பயன்படுத்தி வெவ்வேறு வரிகளை உடனடியாக விதித்துவிட்டார்: 1974இல் இயற்றப்பட்ட வர்த்தக சட்டத்தின் பிரிவு 122 (அதிபர் இதைச் செயலுக்குக் கொண்டுவந்தார்), 1962இல் இயற்றப்பட்ட வர்த்தக விரிவாக்க சட்டத்தின் பிரிவு 232, 1974இல் இயற்றப்பட்ட வர்த்தக சட்டத்தின் பிரிவு 301 (இந்த சட்டத்தைப் பயன்படுத்தி பல நாடுகளின் ஏற்றுமதிகள் தொடர்பாக விசாரணைகளை நடத்தப் போவதாகவும் எச்சரித்தார்), 1930இல் இயற்றப்பட்ட ஸ்மூட்-ஹாலி காப்பு வரி சட்டத்தின் பிரிவு 338.

இந்தியாவைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அனைத்துப் பண்டங்கள் மீதுமான காப்பு வரி 15% மட்டுமே (2026 பிப்ரவரி 2-ல் அறிவிக்கப்பட்டதைப்போல 18% அல்ல). வர்த்தக விரிவாக்கச் சட்டத்தின் பிரிவு 232இன் படி உருக்கு, அலுமினியம், செமி-கன்டக்ட்டர்கள், சில வகை மோட்டார் வாகனப் பகுதிகள் மீதான காப்பு வரி 50% ஆக இருக்கும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் இந்த காப்பு வரிகளின் விகிதம் மிகவும் அதிகம்தான், எனவே நிச்சயம் இந்திய ஏற்றுமதியை பாதிக்கும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆராய்ந்து வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க – இந்திய வர்த்தகம் தொடர்பான இடைக்கால உடன்படிக்கை தொடர்பான பேச்சையும் ஒப்பந்தத்தை இறுதி செய்வதையும் ஒத்திவைக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டன – ஆனால் அதை எப்போது இறுதி செய்வது என்பதைத் தீர்மானிக்கவில்லை!

யாராலும் உதவ முடியவில்லை

இதற்கிடையே அமெரிக்க நாடாளுமன்றத்திலிருந்து பலதரப்பட்ட குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. நெருக்கடிகாலத்தில் செயல்படுத்துவதற்கான சட்டத்தைப் பயன்படுத்தி ட்ரம்ப் விதித்த காப்பு வரி உயர்வை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தலையிட்டு முழுமையாக ரத்து செய்யும் வரையில்- வரி அதிகாரத்தை அரசின் தலைமை நிர்வாகி (அதிபர்) பயன்படுத்தியதற்கு எதிராக - நாடாளுமன்றத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் நாடாளுமன்றத்தால் ஏதும் செய்ய முடியாது. காரணம், தான் விதித்த வரி உயர்வுக்கு சட்ட அங்கீகாரம் தாருங்கள் என்று நாடாளுமன்றத்தை அவர் அணுகப்போவதில்லை. தன்னுடைய செயலுக்கு நாடாளுமன்றம் ஏற்கெனவே அங்கீகாரம் அளித்துவிட்டதாகவே நம்புகிறார். அது மட்டுமில்லாமல் அமெரிக்க நலனுக்கு எதிரானது என்று கருதினால் பிற நாடுகளின் மீது பரஸ்பர காப்பு வரியை அதிகப்படுத்த, ஏராளமான சட்டங்கள் ஏற்கெனவே உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு ட்ரம்ப் புதிதாக விதித்திருக்கும் காப்பு வரிகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் வரலாமே தவிர, அவருடைய செயலுக்கு ஆதரவாக புதிய சட்டம் இயற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்றே பல நிபுணர்கள் கருதுகின்றனர்.

ட்ரம்ப் தங்கள் நாட்டின் மீது காப்பு வரியை அதிகப்படுத்திவிடக் கூடாதே என்று முன்னெச்சரிக்கையாக அந்நாட்டுடன் பரஸ்பர வர்த்தக உடன்படிக்கையை செய்துகொண்ட நாடுகளுமே இப்போது செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. இந்த ஆண்டு பிப்ரவரி 2இல் இருதரப்பு வர்த்தகம் தொடர்பாகக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்ட இந்தியாவும் உதவிக்கு யாருமில்லாமல் தவிக்கிறது. புதிய சூழலில் வர்த்தக உடன்பாடு தொடர்பாக யாரும் தங்களைச் சந்திக்கவில்லை என்றும், அத்தகைய உடன்பாடுகளிலிருந்து விலகவே தங்களுடைய நாடு விரும்புகிறது என்றும் வர்த்தக உடன்பாடு பேச்சுகளில் முக்கியப் பங்கு வகிக்கும் அமெரிக்க அதிகாரி ஜேமிசன் கிரீயர் கூறுகிறார். தங்களுடன் வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்ட நாடுகள் எல்லாம் ‘நல்ல பையன்கள்’என்றும் அவர் சான்றுரைத்திருக்கிறார்- அதாவது இந்த ‘நல்ல பையன்கள்’எல்லாம் தொடர்ந்து ‘நல்ல பையன்களாகவே’ தொடர வேண்டும் என்ற தங்களுடைய விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். தங்களுடனான உடன்படிக்கையிலிருந்து எந்த நாடாவது விலகினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று அதிபர் டிரம்ப் இரண்டு முறை எச்சரித்திருக்கிறார். ‘நல்ல பையன்கள்’ தங்களுடைய முடிவை மாற்றிக்கொண்டால் காப்பு வரி விதிப்பு மேலும் பல மடங்கு அதிகரிக்கும், அமெரிக்காவால் பல்வேறு விதங்களிலும் பழிவாங்கப்படுவார்கள். ட்ரம்ப் ஏதோ ஒப்புக்கு மிரட்டுகிறார் என்று எவரும் கருதிவிடக் கூடாது, அவருடைய செயல்கள் யாவும் அவருக்கு ஏற்படும் திடீர் ஆசைகளாலும், தவறான சார்பு கண்ணோட்டங்களாலும்தான் வழிநடத்தப்படுகின்றன. காப்பு வரிகளை அவர் வெறும் வரிகளாகக் கருதவில்லை, அவற்றைப் பொருளாதாரத்தை முடக்கும் வலிமையான ஆயுதமாகவே கருதுகிறார்.

உலக வர்த்தகமே சீர்குலைவு

வர்த்தகம்-பொது காப்பு வரிக்கான ‘காட்’ ஒப்பந்தத்தின் இடத்தை மராகீஷ் என்ற ஊரில் நடந்த உலகப் பொது ஒப்பந்தம் பிடித்துக்கொண்டது, ‘உலக வர்த்தக அமைப்பு’ (டபிள்யுடிஓ) என்ற நிறுவனமும் பிறந்தது. நன்கு உருவாக்கப்பட்ட விதிகள் அடிப்படையில், உலக நாடுகள் பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்குப் பிறகும் நாடுகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகளும் வர்த்தகம் தொடர்பாக பூசல்களும் ஏற்பட்டன; ஆனால் உலக வர்த்தக அமைப்பு, அவற்றுக்குத் தீர்வுகாணும் இடமாக அமைந்தது. உலக வர்த்தகமானது 1995 ஜனவரி 1க்குப் பிறகு, முன்னெப்போதும் இருந்திராத வகையில் பல மடங்காகப் பெருகியது. அவை அனைத்துமே இப்போது சீர்குலைந்துவிட்டன, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ‘எடுத்தேன்-கவிழ்த்தேன்’ என்ற அணுகுமுறையால். காப்பு வரியை உயர்த்திவிடுவேன் என்று ட்ரம்ப் மிரட்டியதாலேயே பல நாடுகள் அதனுடன் வர்த்தக உடன்பாடு செய்துகொண்டு, கோடிக்கணக்கில் அமெரிக்காவிடம் பொருள்களை வாங்குவதாக ஒப்புக்கொண்டு சில பண்டங்களுக்கு மட்டும் ஓரளவுக்கு காப்பு வரிச் சலுகையையும் பெற்றன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் பரஸ்பரக் காப்பு வரி உயர்வு ரத்தானது என்றாலும் பிற சட்டங்கள், நிர்வாக ஆணைகள் உதவியுடன் டிரம்ப் மீண்டும் எடுத்த நடவடிக்கைகளால் கிட்டத்தட்ட அதே அளவுக்கு வரி விகிதங்கள் வந்துள்ளன. அமெரிக்காவுடன் நீண்ட நாள்கள் விரிவாகப் பேசி பெற்ற காப்புவரிச் சலுகைகள் எல்லாம் ஒரு நொடியில் காற்றில் கரைந்துவிட்டன – ஆனால் அமெரிக்காவின் பொருள்களைக் கொள்முதல் செய்வதாக அவை செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மட்டும் நீடிக்கின்றன.

அமெரிக்காவின் அடாவடிக்கு எதிராக உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரேசில் அதிபர் லூலா டிசில்வா விடுத்த கோரிக்கைதான் சரியானது. சீனாவைத் தவிர வேறு எந்த நாட்டாலும் அமெரிக்காவுக்கு எதிராகத் தனித்து நிற்க முடியாது. இது சமத்துவமற்ற உலகம், உலகின் மிகப் பெரிய பொருளாதார வலிமையுள்ள நாட்டின் தலைவரோ தவறான சிந்தனைகளைக் கொண்டிருக்கிறார், அத்துடன் அடுத்து அவர் எப்படிச் செயல்படுவார் என்று ஊகிக்கவும் முடியவில்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கட்டளைக்கு இந்தியா பணிந்துவிட்டது, மிகவும் வளர்ச்சி பெற்ற நாடுகளான ஜப்பானும் தென் கொரியாவும்கூட இந்தப் பட்டியலில் சேர்ந்துவிட்டன.

அமெரிக்க நிலவரம்

அமெரிக்காவில் மக்கள் செல்வாக்கைக் கணிசமாக இழந்துவருகிறார் அதிபர் ட்ரம்ப். அவரை ஆதரிப்போர் எண்ணிக்கை மொத்த வாக்காளர்களில் 40%-க்கும் கீழே சரிந்துவிட்டது. அமெரிக்கர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் அருகிவிட்டன. பெரும்பாலான நுகர்பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து நடுத்தர மக்களால்கூட வாங்க முடியவில்லை. பணவீக்கம் கடுமையாக உயர்கிறது. பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேற வரும் அகதிகளுக்கு எதிரான ட்ரம்ப்பின் நிலை – அமெரிக்க மக்களில் கணிசமானவர்களுடைய வரவேற்பைப் பெற்றுள்ளது, ஆனால் அதுவே அவருக்கு எதிராகவும் திரும்பிவிட்டது. குடியேறிகளைத் தடுக்கும் அரசின் முடிவு - மனித உரிமைகள், குழந்தைகளின் உரிமைகள், மாநிலங்களின் சுயாட்சி அதிகாரங்கள், சட்டப்படியான ஆட்சி – ஆகிய அனைத்தையும் காலில் போட்டு மிதிப்பதாக மாறிவிட்டது. சட்டவிரோதமான குடியேற்றங்களைத் தடுக்க வேண்டும் என்று கோரும் அமெரிக்கர்கள்கூட, அமெரிக்க கூட்டரசின் சில நிர்வாக அமைப்புகள் மேற்கொண்டுவரும் இரக்கமற்ற ஒடுக்குமுறைகளால் அவமானம் அடைந்துள்ளனர்.

இத்தகைய உள்நாட்டுச் சூழல் ட்ரம்ப்பை அரசியல்ரீதியாக வலிமையற்றவராக மாற்றிவிடும். நவம்பர் 2026இல் சில மாநிலங்களுக்கு நடக்கும் பொதுத்தேர்தலில் அவர் தோல்விகளைச் சந்திக்கவும் நேரிடும். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒரு அவையிலோ - அல்லது இரு அவைகளிலுமேயோ ஆளும் குடியரசு கட்சி பெரும்பான்மையை இழக்கக் கூடும். அதற்குப் பிறகு எஞ்சிய இரண்டு ஆண்டுகளிலும் ‘செயலிழந்த அதிபராகத்தான்’ செல்வாக்கில்லாமல் காலத்தை கழிக்க நேரும். அதற்குப் பிறகு ட்ரம்ப்பின் நிர்வாகம், உலக அமைப்புகளுக்கு உரிய மரியாதையைத் தருவதுடன் சர்வதேச சட்டங்கள் – விதிகளின்படியான ஆட்சிக்கும் உரிய இடத்தை வழங்கக் கூடும். அதுவரையில் – இந்தியாவுக்கு வேறு வழியில்லை, அதிர்ச்சிகரமான பயணத்துக்கு தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.


(தமிழில்: சாரி)


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it