Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
4 நிமிட வாசிப்பு

தூக்கம் ஏன் நமக்கு முக்கியம்?

நம் உயிர் நிலைத்திருக்க தூக்கம் மிகவும் அவசியமான ஒரு செயல்நிலை. முக்கியமான உடலியல் மற்றும் உயிரியல் செயல்பாடுகள் பலவும் தூக்கத்தில் மட்டுமே நடைபெறுகின்றன.

தூக்கம் ஏன் நமக்கு முக்கியம்?
X

அறிவியல் உலகம் சமீபத்தில்தான் தூக்கம் குறித்து மிகவும் ஆழமாக ஆராயத் தொடங்கியிருக்கிறது. நம் வாழ்க்கையின் பெரும் பகுதியைத் தூங்குவதில்தான் செலவிடுகிறோம். இதுவே தூக்கத்தின் உடலியல் மற்றும் உயிரியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

நாம் தூங்கும்போது, விழிப்புணர்வு, மயக்கம் ஆகிய இரண்டு நிலைகளுக்கு நடுவில் இருக்கிற ஒரு தனிப்பட்ட நிலைக்குள் நுழைகிறோம். அந்த நிலையில் நமது உடல் முழுவதுமாக ஓய்வெடுத்துகொண்டிருக்கிறது; ஆனால், மூளையோ தேன் சேகரிக்கிற தேனீபோல் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டே இருக்கிறது.

நம் உயிர் நிலைத்திருக்க தூக்கம் மிகவும் அவசியமான ஒரு செயல்நிலை. முக்கியமான உடலியல் மற்றும் உயிரியல் செயல்பாடுகள் பலவும் தூக்கத்தில் மட்டுமே நடைபெறுகின்றன. இது தொடர்பாக அறிவியலாளர்கள் தொடர்ந்து புதிய தகவல்களைத் தந்துகொண்டிருக்கின்றனர்.

அவற்றில் முக்கியமானவற்றை இங்கே தருகிறேன்:

1. மனநிலை (Mood): தூக்கம் நமது மனநிலையை ஒழுங்குபடுத்துகிறது. தரமான தூக்கம் கிடைத்தால், மூளையின் உணர்ச்சி மையம் ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது கவலை, கோபம், ஆத்திரம், அழுகை, ஏமாற்றம், வன்மம் போன்ற தீமை தரும் மன உணர்வுகள் எல்லாமே சமநிலைக்கு வந்துவிடுகின்றன. அதனால் நாம் விழித்தெழும்போது புத்துணர்ச்சியுடனும் மன மகிழ்ச்சியுடனும் செயல்படுவோம். இவை அன்றைய பகல் பொழுதை இனிமையாக்கிவிடும்.

2. நச்சு நீக்கமும் ஓய்வும்: நாம் தூங்கும்போது, தசைகளைத் தளரச் செய்கிறது மூளை. இதனால் பகல் முழுவதும் இயங்கிக் களைத்த தசைகள் இரவில் கூடுதல் ஊட்டம் பெறுகின்றன; மறுநாள் பகல் பொழுதில் இயங்குவதற்கான மேம்பாட்டையும் பெறுகின்றன. மேலும், தெருக்களில் பகலிலும் இரவிலும் சேரும் குப்பைகளை ஊராட்சி மற்றும் நகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்வதைப்போல, நாள்தோறும் நம் உடல் உறுப்புத் திசுக்களில் தேங்குகிற பலதரப்பட்ட நச்சுகளையும் இயற்கைக் கழிவுகளையும் நீக்குவதற்கான செயல்முறையையும் இரவில் கிடைக்கும் தூக்கம்தான் செயல்படுத்துகிறது. சுத்தமடைந்த உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்குவது இயல்புதானே!

3. நினைவாற்றல் மற்றும் கற்றல்: நாம் தூங்கும்போது, அந்த நாளில் ஏற்பட்ட அனுபவங்களை மூளை சீரமைக்கிறது. நாம் பார்த்த, படித்த, கேட்ட, பிரமித்த தகவல்களில் எந்தத் தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. இது கற்கும் திறனையும் நினைவாற்றலையும் வளப்படுத்துகிறது.

4. ரத்த அழுத்தமும் இதய ஆரோக்கியமும்: தூங்கும்போது ரத்த அழுத்தம் குறைகிறது. இதனால் இதயத்துக்கும் ரத்தக் குழாய்களுக்கும் ஏற்படுகிற அழுத்தம் குறைகிறது. இது இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது. படபடப்பு, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க இது உதவுகிறது.

5. பசி உணர்வும் உடல் எடையும்: தினமும் குறிப்பிட்ட நேரத்தில் பசி உணர்வைத் தூண்டுகிற ஹார்மோன்களையும் பசியைக் கட்டுப்படுத்துகிற ஹார்மோன்களையும் சரியான அளவுத் தூக்கம்தான் ஒழுங்குபடுத்துகிறது. நமக்கு நன்றாகச் சாப்பிட்ட திருப்தி கிடைக்க வேண்டுமானாலும் சில ஹார்மோன்களின் உதவி தேவைப்படுகிறது. அவற்றை மேம்படுத்த தூக்கம் தேவைப்படுகிறது. இப்படிப் பல வழிகளில் நாம் சரியான அளவில் உணவு சாப்பிடவும் அதன் மூலம் உடல் எடையைச் சீரமைக்கவும் தூக்கம்தான் உதவுகிறது.

6. நோய் எதிர்ப்பு சக்தி: நாம் தூங்கும்போது, உடல் தொற்றுகள் மற்றும் வைரஸ்களை எதிர்க்கும் டி- செல்கள் (T - Cells) போன்ற பாதுகாப்பு அமைப்புகளை தூக்கம்தான் அதிகமாக உருவாக்குகிறது. மேலும், உடலில் ஏற்படுகிற அழற்சியை எதிர்க்கும் புரதங்களையும் தூக்கமே வளப்படுத்துகிறது. உறுப்புகளின் பாதிப்புகளுக்கு அடிப்படையே பலதரப்பட்ட அழற்சி வினைகள்தான். சரியான அளவு தூக்கம் இந்த அழற்சிகளுக்கு விலங்கு போட்டுவிடுவதால் உறுப்புகள் நலம் பெறுகின்றன.

7. உடல் வளர்ச்சி: மனித வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone) தூக்கத்தின்போதுதான் அதிகமாகச் சுரக்கிறது. இந்த ஹார்மோன் வயதான செல்கள் உள்ள இடத்தில் புதிய செல்களை பிறக்கச் செய்து, எலும்புகளையும் தசைகளையும் வலுப்படுத்துகிறது.

8. செல்களைப் பழுது பார்ப்பது: இரவில் போதுமான அளவு தூக்கம் கிடைக்கிறபோதுதான், உடலில் ‘ஆன்டிஆக்சிடன்ட்கள்’ (Antioxidants) எனும் பழுது பார்க்கும் வேதிப்பொருட்கள் சரியான அளவில் சுரக்கின்றன. பகலில் செல்களில் ஏற்பட்ட சேதங்களைச் சரி செய்யவும் அழற்சியைக் குறைத்து செல்களைப் புதுப்பிக்கவும் அவை உதவுகின்றன.

மேற்சொன்ன புத்துணர்வுச் செயல்முறைகள் எல்லாமே பகலில் நாம் சிறப்பாகச் செயல்படுவதற்கு அவசியமானவை. இப்படிப் பலதரப்பட்ட முக்கியப் பணிகளுக்குத் தூக்கம் உதவுவதால்தான் நமக்கு ஆரோக்கியம் நிலைக்கிறது; நீடிக்கிறது.

தூக்கம் தொலைந்த இன்றைய அவசர வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் இந்த உண்மைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாகத் தூக்கத்தையும் ஓர் ஆரோக்கிய அணிகலனாகக் கருத வேண்டும். உடல்நலம், மனநலம் இந்த இரண்டு நலன்களையும் பெறுவதற்கான திறவுகோல் தூக்கம் என்பதைத் தூக்கப் பிரச்சினையால் தவித்துக்கொண்டிருக்கிற இன்றைய ஜென்-ஸீ (Gen Z) தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டும்.

அத்தோடு, தூக்கத்தை மேம்படுத்தும் முக்கிய வழிமுறைகளையும் தெரிந்துகொண்டால், மனக் கவலைகள் மறந்து மன அமைதியோடு படுக்கைக்குச் சென்று இனியத் தூக்கத்தைத் தினமும் தழுவ முடியும்.


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it